எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி போட்டியிடும் என்று மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று (திங்கட்கிழமை) மாலை பன்ட்ரா பகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது, கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





