இந்தியா பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாகவுள்ளதாகவும் பொருளாதாரத்தில் 5 த்ரில்லியன் டொலரை விரைவில் எட்டவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தென்கொரியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சியோலில் இடம்பெற்ற தொழிற்கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா தற்போது திறந்த பொருளாதார நாடாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 250 பில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை கவர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை வேறு எந்த மிகப்பெரிய பொருளாதார நாடுகளும் எட்டவில்லை.
இதேவேளை சீர்திருத்தங்களின் விளைவாக தொழில் புரிவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொழில்வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளதுடன் தென்கொரியாவை உண்மையான நட்பு நாடாக நாங்கள் பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.





