ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். இதன் போதே அவர் இக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மோடிக்கு எதிராக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு வெட்கமற்ற ஒன்றாகும்.
பொறுப்பற்றதனத்தின் உச்சம். ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸின் மின்அஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை ராகுல் காந்தி கையில் வைத்து பேசுகிறார்.
ஒரு நிறுவனத்தின் உள்நிர்வாகம் தொடர்பான மின்அஞ்சல் நகல் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது என்றால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல் காந்தி பேரம் பேசியுள்ளது தெளிவாகத் தெரிய வருகிறது.
பிரதமர் மோடி ராஜதுரோகம் செய்துவிட்டார் என்று ராகுல் கூறியுள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திரா காந்தி குடும்பத்தில் வந்த பிரதமர்களுடன் எங்கள் தலைவர்களுக்கு கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
ஆனால் நாங்கள் ஒருபோதும் யாரையும் ராஜதுரோகம் என்று குற்றம்சாட்டியதில்லை. இந்த குற்றச்சாட்டினால் ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்” என
ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.






