புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் ஜம்மு காஷ்மீரில் இன்று (திங்கட்கிழமை) 4ஆவது நாளாகவும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரத்தை ஆய்வு செய்த பின்னர் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா ரத்து செய்வதா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இராணுவம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றது. ஹெலிகொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த 14ஆம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தின் பலபகுதிகளிலும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து, வன்முறை சம்பவங்கள் நீடிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.





