பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டது. இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் முறைப்பாடுகள் வந்துள்ளன.
தொழில்நுட்பப் பிரிவு அதனை சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், பாகிஸ்தானில் மட்டும் வழக்கம்போல் வெளியுறவுத்துறை இணையதளம் செயற்பட்டுவருகிறது.
ஆனால், அரபு நாடுகள், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, நெதர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இணையதளத்தை இயக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் ஹேக்கர்களின் கைவரிசை இந்தியாவில் இருந்து நடைபெற்றுள்ளதாகவும் தி டான் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





