சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தி.மு.க.வை விமர்சனம் செய்துள்ளார்.தி.மு.க.வை நான் கடுமையாக விமர்சிக்க தி.மு.க.வே காரணம் என்று நடிகரும் கட்சியும் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழன் என்பது தகுதியல்ல. அது விலாசம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்.
முழுநேர அரசியல்வாதியாக எவரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருந்துகிறேன்.
நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன். தி.மு.க.வை நான் கடுமையாக விமர்சிக்க தி.மு.க.வே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே தி.மு.க.வை விமர்சிக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.





