
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிகையில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியது. அதனை தமிழக ஆளுநருக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் இன்னும் அமைச்சரவை தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காமல் தொடர்ந்து அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கின்றது. இவர்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே, இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன் தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சரவைத் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு, 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
