
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) அரசியலமைப்புக் குழு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “2015, ஜனாதிபதித் தேர்தலின் போது அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துவோர் மட்டுமல்லாது தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.
இதன்போது தேசிய – சர்வதேச அரசியல் கொள்கையில் நல்லாட்சி என்ற கொள்கையின் கீழ்தான் நாம் செயற்பட ஆரம்பித்தோம். இதற்கிணங்கவே 19 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் கொண்டுவந்தோம்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தோம். பின்னர் ஓகஸ்டில் நாம் பொதுத் தேர்தலை நடத்தினோம்.
கடந்த காலங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டன. இதற்கிணங்கவே 19 ஆவது சட்டத்தை எம்மால் கொண்டுவர முடியுமாக இருந்தது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட வாக்குறுதிக்கமைவாகவே இதனை நாம் கொண்டுவந்தோம்.
ஆனால் 19வது திருத்தச்சட்டத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன. லங்கா தீப பத்திரிகை கூறியது போல், 19வது திருத்தச்சட்டக் குழந்தை ஊனமாகவே பிறந்துள்ளது.
இலங்கையில் தான் அதிகளவான தானங்கள் வழங்கப்படுகின்றன. உணவு, இரத்தம், உடல் உறுப்புக்கள், ஏன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் உயிர், உதிரம், அவையம் என பலதையும் தானம் செய்தனர். ஆனால் எவரும் தனது அதிகாரத்தை தானம் செய்தது இல்லை.
நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் எனது அதிகாரத்தை தானம் செய்துள்ளேன்.. சுயாதீன ஆணைக்குழுக்களைய நாம் ஸ்தாபித்துள்ளோம். எனினும், நான் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக கூறுகிறார்கள். நான் அவ்வாறானதொரு கருத்தை ஒருபோதும் கூறியது கிடையாது.
அரசமைப்புச் சபைக்கு ஒரு வரையறை இருப்பதுபோல, சுயாதீன ஆணைக்குழுக்களின் வரையறை என்ன என்ற வினவியிருந்தேன்.
ஆனால், பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கு இணங்க, உயர்நீதிமன்ற நீதியரசர் பதவி தொடர்பில் நான் எதிர்ப்பினை வெளியிட்டதாக அவர்கள் கூறினார்கள்.
உண்மையில், அந்த நியமனம் குறித்து எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இதனை தலைக்கீழாக மாற்றி, நாட்டுக்கு என்னை தவறாக சித்தரிக்கவே சிலர் முயற்சித்து வருகிறார்கள். இவற்றை நான் முற்றாக நிராகரிக்கிறேன்.
