மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 தினங்களில் பாதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில், 70 வீதமானவர்கள் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணியகத்தின் டெங்கு பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் தர்சினி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை்த தெரிவித்தார்.
இந்த கலந்தாராய்வில், மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
குறிப்பாக கழிவகற்றல் நடவடிக்கைகளின்போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் நுளம்பு பெருக்கம் அவற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்துடன், டெங்கு தொடர்பான நடடிக்கைகளுக்கு பாடசாலை மட்டத்தில் ஒத்துழைப்பு குறைவாக கிடைக்கின்றமை மற்றும் முறையான செயற்பாடுகளை மேற்கொள்ளாமை தொடர்பிலும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கலந்தரையாடலில், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கிரிசுதன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், பொது சுகாதார பரிசோதகர்கள், கல்விப் பணிமனை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் ஏனைய பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.





