புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள தற்போதைய ஆட்சிக் காலத்தில் சந்தர்ப்பம் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு இன்று (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை கூறினார்.
சிங்கள மக்களுக்குரியதை நாம் கேட்கவில்லை. ஆனால் எங்களுக்குரியதை நீங்கள் தடுத்து வைத்திருக்காதீர்கள் என்றுதான் கேட்கின்றோம். நாடு பிரிந்துவிடும் என்பது அவர்களுக்கு இருக்கும் பயம்.
ஆனால் ஒரு நாட்டுக்குளே தான் தீர்வு என்பதை அவர்கள் உணர வேண்டும். மீண்டும் வன்முறையில் இறங்கமாட்டோம் என்கின்ற செய்தியும் அவர்களைச் சேர வேண்டும்.
இந்த ஆட்சிக் காலத்திலே அரசியலமைப்பை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைக்கு ஆட்சியை தீர்மானிக்கும் சக்திாகவும் நாங்கள் இருக்கிறோம். ஆனால் நாம் அதை காட்டிக்கொள்ளவில்லை.
எங்கள் அணுகுமுறையும் முன்னேற்றமும் நிதானமாக செய்யப்படவேண்டியது அவசியம். எங்களுடைய இருப்பைப் பாதுகாப்பதற்கு செய்யவேண்டிய சில தருணங்கள் இருக்கிறது. அதற்கு உலகத்தினுடைய அதரவும் தேவையானது.
எனவே உலகத்தோடும் அனுசரித்து செயற்படவேண்டும்” என்று தெரிவித்தார்.





