(பாண்டி)
ஜனாதிபதியின் போதைத்தடுப்புச் செயலணியின் வழிகாட்டலில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை இலங்கை நாடுமுலுவதும் உள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
'போதைக்கெதிரான பாடசாலையின் பலமிக்க ஆதரவு' எனும் தொனிப்பொருளில் கல்வியமைச்சின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு பிரதேசத்தில் மாபெரும் பேரணி வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எச்.எஸ்.பிர்தௌஸ் தலைமையில் இடம் பெற்ற இப்பேரணியில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் பேரணி பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி காத்தான்குடி கடற்கரை வீதி, டீன் வீதி, பிரதான வீதி வழியாக. காத்தான்குடி நகர சபைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் பிரதான வீதி, காத்தான்குடி கடற்கரை வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்தனர்.
பாடசாலை மாணவர்களால் பொது மக்களுக்கு போதையால் ஏற்படும் தீமைகள் தொடர்பான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தனது வாழ்வில் ஒரு போதும் போதை தரும் பொருட்களைப் பாவிக்கமாட்டேன் என உறுதி கூறப்பட்டது.
அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்போரை தடுக்க கோரி காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு பாடசாலை அதிபரால் மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.















