
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(திங்கட்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.
இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதியளித்தார்.
இந்தநிலையில் ராகுலின் குறித்த அறிவிப்பு தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பு ஏழைகள் வாழ்வில் திருப்புமுனையாக அமையும். உலகம் தழுவிய அளவில் அடிப்படை வருமானம் என்பது தொடர்பான கொள்கையைப்பற்றி கடந்த இரண்டாண்டுகளாக விரிவாக விவாதித்துள்ளோம்.
நாட்டின் இன்றைய நிலவரப்படி ஏழை மக்களின் நலன்கருதி இந்த கொள்கையை நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டம் வந்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற 2004-2014 ஆண்டுகளுக்கு இடையில் 14 கோடி மக்களை ஏழ்மையின் பிடியில் இருந்து விடுவித்து, உயர்த்தி இருக்கிறோம்.
இப்போது, இந்தியாவில் இருந்து ஏழ்மை நிலையை துடைத்தெறியும் நடவடிக்கையை மேற்கொள்ள உறுதி ஏற்றுள்ளோம்.
இந்த திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் விரிவாக குறிப்பிடுவோம்’ என தெரிவித்துள்ளார்.
