திரையரங்குகளில் வாகனங்களுக்கான தரிப்புக் கட்டணம் தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட குறித்த பொதுநல மனுவில் ‘பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் வாகனப் பாதுகாப்பிற்காக அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
அத்துடன் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சில அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளான எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் திரையரங்குகளில் உள்ள வாகனப் பாதுகாப்புக் கட்டணம் தொடர்பாக அரசு என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





