LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, January 12, 2019

சூழலியல் புத்தகங்களுடன் பூவுலகைக் காக்க வேண்டிய அதிமுக்கிய காலம் இது!



"உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளைப் போலவே மனித வர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒரு மனிதனும், ஒரு யானையும், ஒரு எறும்பும், ஒரு சிறு பேனும், பூதக்கண்ணாடி மூலம் பார்த்தறியத்தக்க அதிநுட்பமான ஒரு கிருமியும் எல்லாம் ஒரே தத்துவத்தைக் கொண்ட ஜீவராசிகளேயாகும்" - பெரியார்
"மனிதன் சுதந்திரமானவன் என்றால், ஒவ்வொரு நிகழ்வும் மனிதனின் செயற்பாடு அல்லது இயற்கையின் செயற்பாடு ஆகியவற்றின் விளைவாகவே இருக்க வேண்டும். மரபு மூலத்தில் இயற்கையைக் கடந்து ஏற்பட்டதாக எந்த நிகழ்வும் இருக்க முடியாது" - அம்பேத்கர்

"ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கு போதுமான வளம் பூமியிடம் இருக்கிறது. ஆனால், பேராசையை பூர்த்தி செய்ய அல்ல" - காந்தி
ஜீவராசிகள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அதி அக்கறை கொண்ட தலைவர்களின் இந்த வரிகள் தான் சென்னை புத்தக கண்காட்சியில் 'பூவுலகின் நண்பர்கள்' அரங்குக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்கிறது. மார்க்ஸ், நம்மாழ்வார், வங்காரி மாத்தாய் ஆகியோரின் இயற்கை மீதான பற்றுதலை உணர்த்தும் வரிகளும் அரங்கினுள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் திட்டங்கள், இயற்கை விவசாயம், நீர், நிலம், காற்று, உணவு, சூழலியல் கல்வி, சூழலியல் பெண்ணியம் என சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. 'பூவுலகின் நண்பர்கள்' அரங்கில் 'சிறியதே அழகு' எனும் பெயரிலான சிறிய ஆனால் பெரும் கருத்தாழம் கொண்ட சூழலியல் புத்தகங்கள் தொகுப்புகளாக கிடைக்கின்றன.
இவைதான் இந்த அரங்கில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் என 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறுகிறார். 'ஸ்டெர்லைட் வாழ்க! மக்கள் ஒழிக!', 'புவி வெப்பமடைதலும் காலநிலைப் பிறழ்வும்', 'மரங்களை நட்டவன்', 'நீரின் குணங்கள்', 'மழைக்காடுகளின் மரணம்', 'கெயில் - வளர்ச்சிக்குப் பலியாகும் மரங்கள்' என 40 தலைப்பிலான சிறிய புத்தகங்கள், 'சிறியதே அழகு' தொகுப்பில் கிடைக்கின்றன. 16 புத்தகங்களின் தொகுப்பு ரூ.250-க்கும், 23 புத்தகங்களின் தொகுப்பு ரூ.800-க்கும் விற்பனையாகின்றன.

"இயற்கை விவசாயம் குறித்த நம்மாழ்வார் நூல்கள், இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் குறித்த மருத்துவர் கு.சிவராமனின் நூல்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளேன். சிறிய வயதிலிருந்தே அனைத்து வகையான புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டு. நம் மரபிலிருந்து மாறாமல் நம்முடைய உணவு பழக்கம் இருக்கிறதா? அல்லது ஏதேனும் மாறிவிட்டோமா என்பதை சோதிக்க இத்தகைய புத்தகங்களை படிப்பேன்" என்கிறார், இல்லத்தரசி ரமா.
பிளாஸ்டிக் தவிர்த்து சணல் பை, காகித அட்டை, நார், இறகு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ள 'பூவுலகின் நண்பர்கள்' அரங்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல், விடியல் பதிப்பகத்தில் மார்க்சிய சூழலியல் குறித்த புத்தகங்கள் கவனம் பெற்றுள்ளன.
இன்றைய சூழலியல் கேடுகளுக்கு முதலாளித்துவ சமுதாயத்தில் தீர்வு சாத்தியமில்லை, பொதுவுடைமை சமூகத்தில் தான்  சாத்தியம் என்பதை மார்க்சிய கண்ணோட்டத்தில் விளக்கும் ஜான் பெல்லமி ஃபாஸ்டர் எழுதிய 'மார்க்சிய சூழலியல்' விடியல் பதிப்பக வெளியீட்டில் கவனிக்கத்தக்க நூலாகும். அதன் விலை ரூ.300.

மேலும், விடியல் பதிப்பகம் இந்தாண்டு வெளியிட்ட 'மார்க்சியம் இன்றும் என்றும்' புத்தகம் இந்தாண்டு கவனிக்க வேண்டிய புத்தகம். மூன்று புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் 'மாந்தர் கையில் பூவுலகு' என்ற தலைப்பில், பரிதி எழுதிய புத்தகமும் ஒன்று. காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சிக்கல்களை மார்க்சிய கோணத்தில் இந்த புத்தகம் அலசுகிறது.
இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பு, கழிவறை ஆகியவற்றின் பின்னான அரசியலை சாதியம், சுகாதாரம், சூழல் கண்ணோட்டத்துடன் டியானா காஃபே, டீன் ஸ்பியர்ஸ் எழுதியுள்ள 'எங்கே செல்கிறது இந்தியா' புத்தகத்தை 'எதிர் வெளியீடு' இந்தாண்டு வெளியிட்டுள்ளது. அதன் விலை. ரூ.297. உரிய தருணத்தில் வெளியாகியுள்ள முக்கியமான நூலாக இது கருதப்படுகிறது.
உயிரினங்கள் - உறைவிடங்கள்-சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் குறித்து தியோடர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு 'கையிலிருக்கும் பூமி' புத்தகம், வாழும் பூமியின் மீதான அக்கறையை பெருக்கும் வகையில் இந்த புத்தகம் உள்ளது. 'உயிர்மை' பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலைரூ.510.
சூழலை காக்க எப்போதும் இல்லாத வகையில் இப்போது மிக முக்கிய அவசியமும் அவசரமும் எழுந்துள்ள இந்த சூழலில் அவைகுறித்த புத்தக வாசிப்புகளின் மூலமே, சூழல் கேடு, அவற்றால் பாதிக்கப்படும் மக்கள் யார், தீர்வை நோக்கி எப்படி நகர்வது என்பதை அறிய முடியும். சூழலியல் புத்தகங்களுடன் இந்தாண்டு புத்தக கண்காட்சியை கொண்டாடுவோம்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7