விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் சுமார் 8 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர். நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி, 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த நவம்பர் 23 மற்றும் 31-ம் தேதிகளில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதோடு, மத்தாப்பு தயாரிக்க முக்கிய மூலப்பொருளான பேரியத்தை பயன்படுத்தவும், சரவெடிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
இதனால் சிவகாசியில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளை திறக்க முடியாத சூழ்நிலையால் ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் உபதொழில் சார்ந்தோர் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலர் மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது: உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் 100 சதவீதம் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆலைகளைத் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளதால், ஆலையை மூடுவதற்கான உத்தரவை வெளியிடக் கோரி, அனைத்து பட்டாசு ஆலைகள் சார்பிலும் தமிழக தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலைகளைத் திறக்க சுற்றுச்சூழல் விதி 3(3பி)-யிலிருந்துபட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் இத்தொழிலையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளர் சங்கம் சிஐடியு மாவட்டச் செயலர் எம். மகாலட்சுமி கூறியதாவது:பட்டாசு உபயோகத்தை தனித்தன்மையான நிகழ்வு என வகைப்படுத்தி, அவசரச் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இதற்காக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
இதுகுறித்து, மீனம்பட்டி தொழிலாளி சந்தியாகு (52) கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். இதுபோன்று 2 மாதங்களுக்கு மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதே இல்லை. வேலையிழந்ததால் தொழிலாளர் பலர் திருப்பூர் சென்று விட்டனர். சிலர் மரம் வெட்டும் வேலைக்குச் செல்கிறார்கள். பட்டாசு ஆலைகளைத் திறக்கவில்லை எனில், எங்கள் வாழ்க்கை என்னாகுமோ என கலக்கமாக உள்ளது என்றார்.






