சென்னையில் உள்ள பெரும் பாலான கோயில்கள் முன்பு விற்பனை செய்யப்பட்ட அனைத்து வகையான பூக்களும் பிளாஸ்டிக் பையில் அடைத்தே விற்கப்பட்டன. ஒருசில இடங்களில் மட்டும் வாழை இலையில் கட்டி விற்கப்பட்டன.
பெரிய வணிக வளாகங்களில் துணிப் பைகள் ரூ.14-க்கும், மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகள் ரூ.3 முதல் ரூ.8 வரையும் விற்கப்பட்டு வருகின்றன. அங்கும் குறைவான பொதுமக்களே துணிப் பைகளைக் கொண்டு வந்தனர். அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் மற்றும் காய்கறிகள் காகித உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டன.
சாலையோர உணவகங்களில் பெரும்பாலானோர் வாழை இலையை பயன்படுத்தினர். ஆனால் பொட்டலமாக கேட் போருக்கு சாம்பார், சட்னி வகைகளை வழங்க அவர்களிடம் மாற்றுப் பொருட்கள் இல்லை. அது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வும் இல்லை. அதனால் பாத்திரங்களைக் கொண்டுவர விரும்பாத பொதுமக்கள் பலர் உணவு பொட்டலங்களை வாங் காமல் திரும்பிச் சென்றனர்
மேலும், சாலையோர பழச் சாறு கடைகளில் நேற்று பொதுமக்கள் பலர் பாத்திரங்களை கொண்டு வராமல் பழச்சாறை பொட்டலமாக கேட்டனர். அதற்கான மாற்று பொருள் தெரி யாததால் அவர்களால் பழச் சாறை பொட்டலமாக வழங்க முடியவில்லை. அதனால், அரசின் தடை உத்தரவைக் கடைபிடித்த நிலையில், அவர் களின் வியாபாரம் நேற்று மந்தமாகவே இருந்தது.
இறைச்சிக் கடைகளுக்கு வந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் பாத்திரங்களைக் கொண்டு வரவில்லை. சில கடைகளில் அவர்களுக்கு மந்தாரை இலையில் இறைச்சியை பொட்டலமாக கட்டி வழங்கினர். பல கடைகளில் வழக்கம்போல பிளாஸ்டிக் பைகளி லேயே இறைச்சி வழங்கப்பட்டன.
சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு மற்றும் பட்டினப்பாக்கம் மீன் சந்தைகளில் பொதுமக்களே பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். சிறு மீன் வியாபாரிகளும், பல்வேறு வகை மீன்களை தனித்தனியாக பிளாஸ்டிக் பைகளிலேயே வாங்கிச் சென்றனர்.
பிரபல உணவகங்கள் சில வற்றில் மாநகராட்சி நிர்வாகம் நேற்று நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
சில உணவகங்களில் மர ஸ்பூன், தடை செய்யப்படாத பிளாஸ்டிக் டப்பாக்கள் வழங்கப்பட்டன. மாற் றுப் பொருட்கள் தீர்ந்ததால், பிற்பகலிலேயே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் சேவையை நிறுத்தி னர்.
டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத் தியபடி, ஒரு சில மதுக் கூடங்களில் மட்டுமே கண்ணாடிக் குவளைகள் பயன்படுத்தப்பட்டன. கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான மலர், காய், கனி அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் வழக்கம்போல பயன்படுத்தப்பட்டு வந்தன.
மேலும், கொடுங்கையூர், ஜாம் பஜார், வியாசர்பாடி, அரும்பாக்கம் உள்ளிட்ட சில்லறை விற்பனை காய்கறிச் சந்தைகளில் அனை வரும் காய்கறிகளை பிளாஸ்டிக் பைகளில் விற்று வந்தனர். வீட்டி லிருந்து குறைந்த அளவிலேயே பொதுமக்கள் துணிப் பைகளைக் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக சில்லறை வியாபாரிகளிடம் கேட்டபோது, “அதிகாரிகள் நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை. பிளாஸ்டிக் பை விற்பனை கடைகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. நாங்களும் பயன்படுத்துகிறோம்” என்றனர்.
