
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில், திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் 45 உள்ளூராட்சி சபைகளுக்கான அனைத்து
வெற்றிடங்களையும் இவ்வருடம் மார்ச் மாதத்துக்குள் நிரப்புமாறு முடிவெடுக்கப்பட்டது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தற்காலிக ஊழியர்களாக 500க்கு மேற்பட்டவர்கள் கடமை புரிகிறார்கள் எனவும் இதுவரை அவர்கள் நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்படவில்லை எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக உள்ளூராட்சி சபை தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் உள்வாங்கி, வெற்றிடங்கள் அனைத்தையும் இவ்வருடம் மார்ச் முதலாம் திகதிக்கு முன் நிரப்புமாறு, அதிகாரிகளுக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, கல்வி அதிகாரிகளுடனான மற்றுமொரு கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சின் அதிகாரிகள், கல்வி அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்களிடம், கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கான 1,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்குமாறு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
(அ . அச்சுதன்)





