ரபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரபேல் விவகாரத்தில் தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்காமல் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்.
ரபேல் விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல் குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி தயாரா? எனக்கு 20 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
இந்த ஊழல் தொடர்பாக அவருடன் நான் விவாதம் செய்கிறேன். ஆனால் இதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது என்பது எமக்குத் தெளிவாகத் தெரியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





