தெற்கு தாய்லாந்தை தாக்கிய பபுக் என்ற சூறாவளி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த புயல் இன்று மதியம் கரையை கடந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு தாய்லாந்தில் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் எதிர்பார்கப்பட்ட பபுக் என்ற சூறாவளி தென் கடற்பகுதியை ஊடறுத்து கரையை கடந்துள்ளது. எவ்வாறாயினும் பபுக் என்ற சூறாவளியினால் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பபுக் என்ற சூறாவளி கரையை கடக்கும் போது தெற்கு தாய்லாந்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. அந்த சந்தர்பத்தில் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்பட்டதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பலத்த காற்றினால் மரங்கள் குடியிருப்புகளின் மேல் முறிந்து வீழ்ந்துள்ளமையால் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பபுக் என்ற சூராவளி கரையை கடந்துள்ள போதிலும் 15 மாவட்டங்களில் தொடர்ந்தும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் மாலையில் இருந்து கோஹ சாமுய் விமான நிலையத்திலிருந்து வெளிசெல்லும் மற்றும் உள்வரும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் பீப்பாய்களும் தூக்கியெறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





