
சம்பள உடன்படிக்கை தொடர்பில் செய்து கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக தெரிவித்திருக்கும் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ. வேலு சுரேஷ் சர்மா இதனை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றனில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாளாந்த வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியாத நிலையில் வாழும் இத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான சம்பளத்தையே அடிப்படையாக பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
பல போராட்டங்களை முன்னெடுத்தமையால் குறித்த சம்பள தொகையேனும் எட்டப்பட்டிருக்கின்றது. ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முன்வராத பட்சத்தில் தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கும் சந்தாவை நிறுத்தி விட்டு சட்ட ரீதியாகப் போராடுவதற்கு முன்வந்தால் அதில் ஏற்படும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க ஒன்றியம் தயாராக இருக்கின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் திகாம்பரம் மற்றும் வடிவேல் சுரேஷ், ஆறுமுகன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தொழிலாளர்களின் சம்பளத்தை வரவு செலவு திட்டத்தின் ஊடாக உயர்த்தியிருக்க முடியாது.
கூட்டுச் சேர்ந்து மக்களை முட்டாளாக்கும் செயலுக்கு மலையக தமிழ் அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் செயற்படுவது போல அமைச்சர் நவீன் திஸநாயாக்கவும் செயல்பட்டுள்ளார்” என வேலு சுரேஷ் சர்மா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
