ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த வருடத்திலிருந்து இந்தியா கொள்வனவு செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஏவுகணை கொள்வனவு தொடர்பாக இன்று (புதன்கிழமை) மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கே மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரஷியாவிடம் இருந்து எஸ்-400 அதி நவீன ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு ஒக்டோபர் 2020-ல் இருந்து வரத்தொடங்கும். 2023-ம் ஆண்டுக்குள் அனைத்தும் கொள்வனவு செய்யப்பட்டுவிடும்.
சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
400 கிலோமீற்றர் தொலைவில் வரும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத சிறிய விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.
மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எச்சரிக்கையையும் மீறி, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே ஒக்டோபர் மாதம் கையெழுத்தானது” என மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே மேலும் குறிப்பிட்டார்.





