
மதுரை மாவட்டம், அவனியா புரத்தில் மக்கள் ஒற்றுமையுடன் விழாக் கமிட்டியை அமைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஜல் லிக்கட்டு ஆர்வலர்கள் தவிப்பில் உள்ளனர்.
தை பொங்கலை முன்னிட்டு வரும் ஜன.15,16,17-ல் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. அவனியாபுரத்தை தவிர்த்த மற்ற ஊர்களில் விழாக்கமிட்டி அமைக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. அவனியாபுரத்தில் விழாக் கமிட்டி அமைப்பதில் உள்ளூர் மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இது குறித்து கிராமத்தினர் சிலர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது. இச்சங்கத்தின் தலைவர் கண்ணன் விழாக்கமிட்டி தலைவராக இருந்தார். ஜல்லிக்கட்டு மேடையில் கிராமத்தினரை அனுமதிப்பது, பரிசுப்பொருள் வழங்குவது என பல விஷயங்களில் கண்ணனின் செயல்பாடு பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அனைத்து சமூகத்தினரை யும் இணைத்து விழாக்கமிட்டி அமைக்கவும், அவனியாபுரம் கிராம பொதுமக்கள் சார்பாகத்தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதை எதிர்த்து கண்ணன் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இப்பிரச்சினை குறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமாதானக் கூட்டங்களை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து ஆட்சியர் கிராமத்தினர் மற்றும் கண்ணனிடம் கூறுகையில், அவனியாபுரத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து ஒற்றுமையுடன் வந்து, விழாக்கமிட்டி அமைத்து அனுமதி கேட்டால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும். பிரச்சினைகள் தொடர்ந்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என்றார்.
இந்நிலையில், ஜன.3-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்று வெளியாகும் தீர்ப்பை பொறுத்து கிராமத்தினரின் செயல்பாடு அமையும். கண்ணன் விழாக்கமிட்டியில் ஒருவராக மட்டுமே இருக்க வேண்டும். தலைவராக செயல்பட அனுமதிக்க முடியாது. இதற்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடக்கும்.
இதற்கிடையே கண்ணன் அதிமுக நிர்வாகி என்பதால், பல்வேறு தரப்பிலும் முயற்சி மேற் கொண்டுள்ளார். ஆனால், கிராமத்திலுள்ள பெரும் பாலானோர் கண்ணனுக்கு எதிராக உள்ளதால், அதிகாரிகளாள் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இதேநிலை நீடித்தால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றனர். இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தவிப்பில் உள்ளனர்.
