இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்தல் குழு தீர்மானித்துள்ளது.
எனினும், நாட்டில் தற்போது நிலவி வருகின்ற அரசியல் நிலைமை உள்ளிட்ட காரணங்களினால் விளையாட்டுத்துறை அமைச்சரின் பதவிக்கு உயர்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையின் காரணமாக குறித்த தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலில் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை வெளியிடுமாறு குறித்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், ஜுன் 14ஆம் திகதி வரை தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த இடைக்காலத்தடை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை கடந்த ஜுலை மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்திருந்தது.
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.
அதற்கான வேட்பு மனுக்கள் 14ஆம், 17ஆம் திகதிகளில் ஏற்றுக் கொள்ளப்படும் என அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வேட்பு மனுக்கள் தொடர்பிலான ஆட்சேபனைகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதன்பிறகு ஜனவரி முதலாம், 2ஆம் திகதிகளில் ஆட்சேபனை குறித்த விசாரணைகள் இடம்பெறும்.
இதன்படி, உரிய விசாரணைகளின் பிறகு தேர்தலில் போட்டியிட தகுதியுடைய நபர்களது விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படும்.
பின்னர் தேர்தலில் போட்டியிட தகுதிபெற்றவர்கள் ஜனவரி 14ஆம் திகதி அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி 7ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





