500 மில்லியன் ரூபாய் வரை குதிரைப்பேரம் நடந்ததாலேயே மஹிந்த ராஜபக்ஷவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போனது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, ” நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பேரம் பேசுதலில் ஏற்பட்ட விலை அதிகரிப்பாலேயே மஹிந்தவால் பெரும்பான்மையை பெறமுடியாமற்போனது. மனு கோரல் (டென்டர்) போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலமிடப்பட்டனர்.
சில உறுப்பினர்கள் 500 மில்லயன் ரூபாய் கோரியதாக எனக்கு தகவல் கிடைத்தது. மஹிந்தவுக்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாமற்போனதற்கு அதிகளவான விலைகளே முக்கிய காரணமாக இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்தினார். என்னை பிரதேச சபை உறுப்பினராகக் கூட கண்டுகொள்ளவில்லை.
எனது முடிவு சரியென நீதிமன்றம் தீர்ப்பளித்தால் பிரச்சினை முடிந்துவிடும். அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மை உள்ள தரப்புக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்கவேண்டும். அதை செய்வேன். ஆனால், ரணில் விக்கிரமசிங்கவை நான் பிரதமராக நியமிக்கமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.





