இதுதொடர்பாக சீமான் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தனது எதேச்சதிகார போக்கினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் துச்சமென நினைத்து துளியளவும் மதியாது செயல்பட்டு, தனி மனித உரிமைகளில் தலையிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையாகும். அதனையே முழுமையாக மறுக்கிற ஜனநாயக துரோகத்தை மத்தியில் ஆளும் மோடி அரசு செய்து வருவது எதன்பொருட்டும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும்.
சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையாகும். அதனையே முழுமையாக மறுக்கிற ஜனநாயக துரோகத்தை மத்தியில் ஆளும் மோடி அரசு செய்து வருவது எதன்பொருட்டும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும்.
மோடி அரசின் தனிமனித உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய ஜனநாயக மறுப்புகளுக்குச் சான்றாக மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதித்தது உட்படப் பல்வேறு நிகழ்வுகளைக் கூறி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக தற்போது இந்நாட்டு மக்களின் கணினிகளையும், அலைபேசிகளையும் கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து அறிவித்திருப்பது பேரதிர்ச்சியினைத் தருகிறது. மத்திய அரசின் இம்முடிவானது குடிமக்களின் தனி மனித சுதந்திரத்தின் மீது விழுந்தப் பேரிடியாகும்.
இந்தச் சிறப்பு அதிகாரம் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வு துறை வசம் செல்லவிருப்பது பெருத்த ஆபத்தினை ஏற்படுத்தும். தன்னிச்சையாக இயங்க வேண்டிய மத்தியப் புலனாய்வு துறை முழுக்க முழுக்க மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருப்பது நாடறிந்தது. பாஜகவின் முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும் அதனை மிக வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அத்தகைய சிபிஐ மீதும், அதன் இயக்குநர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த இதுபோன்ற அமைப்புகளுக்கு வரம்பற்ற இந்த அதிகாரத்தை வழங்கியிருப்பதன் காரணம் புரியாமல் இல்லை.
தனிமனித சுதந்திரத்தையே முழுமையாகப் பறித்துவிட்டு நாட்டில் சுதந்திரம் இருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது; வெட்கக்கேடானது. நம்முடைய அனுமதி இல்லாமலேயே நம்முடைய கணினி மற்றும் அலைபேசிகளை கண்காணித்து, அதிலிருந்து தகவல்களைத் திருடுவதை தகவல் ஹேக்கர்கள் செய்யலாம். மக்களால் தேர்வுசெய்யப்பட்டு மக்களை ஆளும் ஓர் அரசே செய்யலாமா?
இந்த செயலின் மூலம் அரசு எதனைச் சாதிக்கப் போகிறது? எதற்காகப் புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை பதற்றத்திற்குள்ளாக்க வேண்டும்? மக்களைப் பார்த்து அரசு அஞ்சுவதன் வெளிப்பாடுதானா இதுவெல்லாம்? ஏற்கெனவே, ஆதார் அட்டையின் மூலம் கைரேகையிலிருந்து, கருவிழிவரை எல்லாவற்றையும் பதிவுசெய்து தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு வரும் பாசிச பாஜக அரசு, தற்போது கணினி, அலைப்பேசி போன்றத் தொலைத்தொடர்பு சாதனங்களையும் கண்காணிக்க முடிவெடுத்திருப்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டப் பெருந்தாக்குதலாகும்.
இக்கொடுஞ்செயலுக்கு நியாயம் கற்பிக்கத் தேசத்தின் பாதுகாப்பு, தேசிய இறையாண்மை என இவர்கள் சொல்லும் காரணங்கள் யாவும் நகைப்புக்குரியவை மட்டுமன்று; அபத்தமானவை. ஒன்றுபட்டு வாழும் நாட்டின் மக்களுக்கிடையே மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு பிளவை ஏற்படுத்தி பிரித்தாண்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயலும் இவர்கள், 'பசு பாதுகாவலர்கள்' என்கிற பெயரில் நாடு முழுவதும் அப்பாவி மக்களை அடித்துக் கொல்வது இன்றும் தொடர்கிறது என்பது நாடறிந்த ஒன்று.
பாஜகவுக்கு எதிராக எழுதினார்கள் என்பதற்காகவே பல பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதும், வழக்குகளைப் பாய்ச்சி அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும், மிரட்டப்படுவதுமான சம்பவங்கள் கருத்துச் சுதந்திரத்தை எந்த அளவுக்கு பாஜக அரசு மறுத்திருக்கிறது என்பதற்கான நிகழ்காலச் சான்று.
சில முறை விவாதிக்கப்பட்டுப் பின்பு கடும் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணிக்கும் இந்நடைமுறையை இப்போது திடீரென அமல்படுத்த முடிவு செய்திருப்பது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் உளவு பார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு யுக்தியாகவே எண்ணத் தோன்றுகிறது.
மத்திய அரசு வழங்கியிருக்கும் இப்புதிய அனுமதியின் மூலம் மக்கள் அவர்களுக்கு தெரியாமலேயே கண்காணிக்கப்பட்டு, பின்தொடரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாய் அமையும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. மக்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களைக் கண்காணிக்க அரசு முடிவெடுத்திருப்பது மக்களின் அடிப்படை உரிமையிலும், அந்தரங்கத்திலும் தலையிடுவதோடு சொந்த நாட்டு மக்களையே எவ்விதக் காரணமுமின்றி குற்றவாளிகள் போல் நடத்தும் சர்வாதிகாரச் செயலாகும்.
ஆகவே, ஜனநாயகத்தின் அடிநாதத்தையே ஆட்டம் காணச் செய்யும் இந்நடைமுறையினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் அரசுக்கு எதிராக நாடு முழுக்க பெரும் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன்" என சீமான் தெரிவித்துள்ளார்.
