பனுவல்களின் பக்கங்களினிடை
விரவிக் கிடக்கும் சொற்களோடு மறுக்கி
விளையாடி அறிவை பெருக்குவதை விடவும்
பந்துகளோடு விளையாடிக் கழிப்புறலாம்
என்பதனை இலக்கு வைத்தே
பள்ளி செல்கிறான் சிறுவன்
அவனது புத்தகப் பையினுள்
பென்சிலும் அழிப்பானும்
இருக்கிறதோ இ்ல்லையோ
நிச்சயம் பந்துகள் இருக்கும்
செல்லும் வழி நெடுகிலும் கிடக்கும்
உலர்ந்த மாங்கொட்டை முதற்கொண்டு
வெற்றுப் பிளாஸ்ரிக் குப்பிகள் வரையென
கண்களில் அகப்படும் அனைத்தையும்
பந்துகளென உதைத்தவாறே
மிக ஆர்ப்பாட்டமாக விரைந்து செல்கிறான்
இடையில் குறுக்கறுக்கும்
மந்தைகளோடு தானுமோர் மந்தையாகி
பாடசாலை தாண்டி அதன் பின்னால்
அலைந்து திரிகிறான்
வகுப்பறையில் தன்னை தனகும்
சக மாணவ மாணவிகளின் பட்டப் பெயர்களை
புதிதாய் நிறம் பூசிய எல்லைச் சுவரினில்
கரியால் தீட்டி வெஞ்சம் தீர்க்கிறான்
பின்னர் நின்ற நிலையில்
மூத்திரம் அடித்து ஓவியம் வரைந்து
கழைப்பை ஆற்றுகிறான்
இப்படியக குறும்புகள் புரிந்து பட்டாம்பூச்சியென
அலாதியாகப் பறந்து திரிகிறான்
இத்தனைக்கும் அவனது பனுவல்கள்
புரட்டிப் பார்க்கப்படாமல்
அப்படியே புத்தம் புதிதாய் இருக்கிறது
ஜமீல்
