தனது பாடப் புத்தகத்தில்
காடுகளின் ஆதி வரலாறுகளை
படித்த கணத்திலிருந்து
அதன் புதர்களின் நிறங்களினையும்
வயது முதிர்ந்த மரங்கள் ஓயாது மீட்கும்
குளிர்ந்த இசையினையும்
மேகங்கள் உரசிச் செல்லும்
மலைத் தொடர்களையும்
தரிசிக்க அவாவுறுகிறாள் ஹயா
அது பற்றியதான கதையாடல்களை
மீளவும் மீளவுமென பேசியவாறே நச்சரித்தாள்
அவளின் எண்ணத்தை திசை திருப்பவென
காட்டுக்குள் பதுங்கியிருந்த
கொடுரம் மீந்த பிராணிகள்
சிலதை திறந்து விடுகிறேன்
அவள் சற்றும் அச்சமுறவில்லை
பறவைகள் விலங்குகள் பற்றியும்
அதன் இனிமையான மொழி பற்றியும்
வியந்து ரசித்துப் பேசி
தன்னை அழைத்துச் செல்லும்படி மாய்கிறாள்
உடன் அவளை அழைத்துக்கொண்டு
காட்டுக்குச் செல்கிறேன்
விதம் விதமான பறவைகள் விலங்குகளென
பரபரப்பாக இருந்தது காடு
அது சொர்க்கத்தில் வசிக்கும் உணர்வை ஏற்படுத்தியதியதாகச் சொன்னாள்
பரிதி மலைகளுக்கு பின்னால்
தனது ஔியை சுருட்டிவைத்துக்கொண்டு
உறங்கச் செல்கிறது
அந்தி நெடுத்து இருள் படர்கிறது
காட்டை விட்டுப் பிரிந்துவர மனமின்றி
அங்கேயே தங்கிவிட வற்புறுத்தினாள்
உடன் காட்டை புகைப்படச் சுறுளினுள்
சிந்தாமல் அள்ளியெடுத்து.வந்து
அவளது அறைச்சுவரில் மாட்டிவிடுகிறேன்
அது காட்டில் வசிக்கும் உணர்வினை
ஏற்படுத்தியதாக இருந்தாலும்
மரங்களின் இடையுறா இசையும்
பட்சிகளி்ன் பாடல்களுமின்றி இருப்பதானால்
அதனை காடென ஏற்க மறுத்துவிட்டாள் ஹயா
ஜமீல்
