தண்ணீருக்குள் நெருப்பை கொண்டு செல்லும் சர்வாதிகாரியை பதவியில் அமர்த்தியமையே இன்றைய அரசியல் குழப்பத்திற்கு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் சத்தியாகிரக போராட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு தற்போது பைத்தியமயமாகியுள்ளது. முன்பு இருந்த சர்வாதிகாரியை மாற்றி தண்ணீருக்குள் நெருப்பை கொண்டு செல்லும் சர்வாதிகாரியை பதவியில் இருத்தியமையே இதற்கு காரணம்.
தற்போது நாட்டில் அரசியல் யாப்பு, நாடாளுமன்றம், அமைச்சரவை ஆகியவை இல்லாது செய்யப்படுகின்றது. வரலாற்றில் இதுபோன்று நடந்ததில்லை. இவ்வாறான நிலை தொடர்பில் ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமான பதில்களையே கூறி வருகின்றார்.
இந்த பிரச்சினையின் ஆழத்தை பிரச்சினைக்கு காரணமான ஜனாதிபதி விளங்கிக்கொள்ளவில்லை. அனைத்தையும் பொலன்னறுவையை போன்றே நினைத்து செயற்படுகின்றார். தற்போது நீதிமன்றம் இது குறித்து அனைத்து தரப்பின் சாட்சியங்களையும் பெற்றுள்ளது.
அவற்றை ஆராய ஒரு நாள் வேண்டும் அதனாலேயே தீர்ப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை மாற்றி மீண்டும் 18 ஆவது திருத்தத்திற்கே சென்று தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவிவகிக்கவே இவர் முயற்சிக்கிறார்.





