ஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் இவ்வாண்டில் மட்டும் 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சியொன்றில் இன்று (சனிக்கிழமை) பங்கேற்றபின்னர் செய்தியாளர்களிடம் கருத்துக் கூறும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “பாகிஸ்தான் இராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஜம்மு – காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 225 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் குறித்து உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு உரிய தகவல் அளித்து வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவுவதை உறுதி செய்வோம். இந்தியாவில் ஜம்மு – காஷ்மீரை தாண்டி பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இதனை தடுக்க ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்யும்” என்று தெரிவித்தார்.






