ஒற்றைப் பனை - ஓங்கி
உச்சிவான் தொட்டு நிற்கும்
நெட்டைப் பனை
பார்க்கின்ற போது மனம்
மயக்குதெனை - பல
பறவைக்கும் பல்லிக்கும்
சொந்த மனை
வரப்போரம் முளைத்திட்ட
இந்தப் பனை - நம்ம
வயக்காட்டு முருகருக்கு
சொந்தப் பனை
களைப்போடு வந்தவனை
கவரும் பனை - ஏறி
கள்ளிறக்கத் தூண்டுது
ஊர்க் கந்தப்பனை
இருகரையும் கூராக
இருக்கும் மட்டை - இனி
இராசையா வேலியிலே
இல்லை ஓட்டை
எழிலோடு அசைகின்ற
இந்த ஓலை - ஏழைக்
குடிசைக்கே கூரையாய்
மாறும் நாளை
அருண் மயூ
