
கர்நாடக மாநிலம் தும்கூர் ஸ்ரீ சித்தகங்கா மடத்தைச் சேர்ந்த சாமியார்
சிவக்குமார். இவ ருக்கு தற்போது 111 வயது ஆகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் குரோம்பேட்டை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சித்தகங்கா மடம் சுவாமியை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் உள்ளார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார். அவருக்குச் சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களைப் பாராட்டுகிறேன்.
கர்நாடக மாநிலத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான காவிரி பிரச்சினை 125 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினை இவ்வளவு ஆண்டுகளாக நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் தமிழக அரசுடன் இந்தப் பிரச்சினையை பேசித் தீர்க்கவே விரும்புகிறோம்
தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த அணை விவசாய பாசனத் துக்காகக் கட்டப்படவில்லை. இந்த அணை நீரை மின்சாரம் எடுக்கவும், குடிநீருக்காகவும் மட்டுமே பயன்படுத்த உள்ளோம்.
இந்தப் பகுதியில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்தான் உள்ளன. மழைக்காலங்களில் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தமிழக விவசாயிகளுக்குப் பயன்படும்.
உச்ச நீதிமன்றம் 177 டிஎம்சி தண்ணீரை விட வேண்டும் என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் நாங்கள் 394 டிஎம்சி நீரைத் தமிழகத்துக்கு விட்டுள்ளோம். இதில் 50 சதவீதம் கடலில்தான் சென்று கலந்தது.
இந்தக் காவிரி பிரச்சினை ஏன் 125 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். தமிழக அரசும் கர்நாடக அரசும் சமுகமாக பேசி முடிவெடுக்கலாம் என்பதே எங்கள் விருப்பம். நாங்கள் தமிழக மக்களைச் சகோதரர்களாகவே பார்க்கிறோம் என்றார்.
சுவாமிகளுடன் எடியூரப்பா சந்திப்பு
இதேபோல் கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவும் தும்கூர் சித்தகங்கா மடத்தைச் சேர்ந்த சாமியார் சிவக்குமாரை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளதாகவும், அவர் நலம் பெற்று வந்து மக்களுக்குச் சேவை செய்ய இருப்பதைக் கர்நாடக மக்கள் மட்டுமின்றி உலகத்தில் உள்ள அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
