
ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேற மறுப்பவர்களின் குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, பொங்கல் பரிசு உள்ளிட்ட நலத்திட்டங்களை நிறுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜ அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
பொதுப்பணித்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஏற்கெனவஏ 399 வீடுகள் அகற்றப்பட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அகற்றப்பட்டவர்களுக்கு வசிக்க குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேறு இடத்தில் ஒதுக்கிய வீடுகளுக்கு மாறுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவர்களுக்கு சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு ஆக்கிரமிப்பை அகற்றுவதில் எந்த சமரசமும் காட்ட தேவையில்லை. ஆக்கிரமிப்பை காலி செய்ய மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீரை நிறுத்த வேண்டும். குடும்ப அட்டைகளை அவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும. பொங்கல் பண்டிகைக்கான அரசு வழங்கும் பலன்களை குடும்ப அட்டை மூலமாக அவர்கள் பெறவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு மாறியதை உறுதிபடுத்திய பின்னர் புது குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என காரணம் கூறி தாமதிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கை 2019 ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
