செப்டம்பர் மாதம். மரியன்னையின் முக்கிய திருநாள் இடம்பெறும் மாதம் என்ற வகையிலும், வறுமை, ஏழ்மை, எளிமை என்பவற்றோடு பின்னிப் பிணைந்து தம் வாழ்வால் ஏற்றம் பெற்ற தூய வின்சன்ட் டி போல் மற்றும் அருளாளர் பிரெட்ரிக் ஓஸானம் ஆகியோரின் திருநாட்களையும் கொண்டதாலே சிறப்புறுகின்ற மாதமாக இதை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.வறுமையும் வெறுமையும் ஒன்று கலந்ததுதான் வாழ்க்கை என்றாகிறது. வறுமையான வாழ்வு எதிலும் வெறுமையைத்தான் காண்பிக்கின்றது. வெறுமை என்றும் வறுமையைத்தான் காட்டி நிற்கின்றது. இதுதான் உலக நியதியாக இருக்கின்றது. இருந்தும் கடவுளின் அருளின் துணையோடு இதைத் தம் வாழ்வில் மாற்றியமைத்துக் கொண்ட மூவரது திருநாட்களும் இந்த ஒரு மாதத்தில் இடம்பெறுவது சிறப்பானது.
மரியாள் கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றும் படியாக தன்னை முற்றிலுமாக வெறுமையாக்கிக் கொண்டாள். அவளது வாழ்க்கை பற்றிய ஆசைகள், தன் எதிர்கால வாழ்வு பற்றிய கனவுகள் என்று தன் வாழ்வில் எவை குறித்து அவள் மனதில் எதிர்பார்ப்புக்களையும், ஆவலையும், ஆசைகளையும் உருவாக்கியிருந்தனவோ அவை அனைத்தையும் ஒரே நொடியில் தூக்கிப் போட்டு விட்டுத் தன்னை இறைவனின் அடிமையாக்கிக் கொண்டவள் அவள். அதன் பின்னர் அவள் மனதில் அத்தகைய கனவுகள் இருக்கவில்லை, ஏக்கங்கள் இருக்கவில்லை, ஆசைகள் இருக்கவில்லை. அனைத்தும் வறுமைக் கோலம் கொண்டு விட்டன. அவள் தன்னை இறைவனுக்கு அடிமைச் சாசனம் எழுதிய பிறகு அவளிடம் இவை ஒன்றும் இருக்கவில்லை. ஆனாலும் அவள் உயர்வு கண்டாள். மனிதருக்குள்ளே மிகவும் உயர்ந்த, பேறு பெற்ற கன்னியாக அவள் மாற்றமடைந்தாள்.
தூய வின்சன்ட் டி போல் வறுமையோடிணைந்த வாழ்வைக் கொண்டவர். ஆனாலும் வெறுமை அவரை ஆட்கொள்ள முடியவில்லை. தன் வாழ்வில் ஒரு இலட்சியம் நோக்கிப் பயணிக்க அவர் எடுத்துக் கொண்ட முடிவால் அவரை வெறுமை ஆட்கொள்ள முடியவில்லை. தனது உழைப்பால் தன்னிடம் இருந்திருக்கக் கூடிய வெறுமையை அவர் விரட்டியடித்தார். சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தும், தன் அறிவினால் வெறுமையைத்; துரத்தி, குருவாக உயர்வடைந்து, பிரான்சு தேச அரசவையில் மதியுரை மந்திரி என்ற வகையில் ஏற்றம் கண்டாரவர். தன் மகன் குருவாக வந்து பணம் சம்பாதித்து தங்கள் குடும்பத்தை ஆதரிக்க வேண்டும் என்கின்ற பெரும் எதிர்பார்ப்போடு இருந்த பெற்றோரது கனவை அவர் நிறைவேற்றவில்லை. மாறாகத் தனக்குக் கிடைக்கக் கூடிய வருமானமுள்ள பங்கை தன்னோடு போட்டி போட்டுக் கொண்டு நின்ற குருவானவர் ஒருவருக்கு விட்டுக் கொடுத்து தனக்குத் தானே வருமானம் தேடி ஏழ்மையைப் படித்து வாழ்ந்த அவரை வெறுமை ஆட்கொள்ள முடியாது போயிற்று. அவர் கனவுகள், ஆசைகள் இல்லாத ஒருவராக இருந்திருக்கவில்லை. இருந்தும் அவர் அவற்றை ஒதுக்கி வைத்தார,; இதனால் எதிர்பாராத உயர்வுகள் அவர் பாதையில் வந்தபோதும் அதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு தன் பணி தன்னைப் போன்ற வறுமையில் வாடுபவர்களுக்கே என்று ஏழ்மைப் பணி செய்து வாழும்போதே புனிதர் என் கின்ற மேன்மையைக் கண்டவர் அவர். வறுமையும், வெறுமையும் அவரிடம் தோற்றுப் போயின.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
(தொடரும்)





