LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 8, 2018

பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3


பேராசிரியர் சி. மௌனகுரு 

தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும்
---------------------------------------------------------------------------
தெரிதா 40க்கும் அதிகமான ஆய்வு நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார
. மேலும் பல உரைகளையும் ஆற்றியுள்ளார்
. மனித பண்பாட்டியல் துறை,
சமூக அறிவியல்
, மெய்யியல்,
இலக்கியம்,
சட்டம்,
மானிடவியல்,
வரலாற்று ஆய்வியல்,
மொழியியல்,சமூக-மொழிவியல்,
உளப்பகுப்பியல்,
அரசியல் கோட்பாட்டியல்,
பெண்ணியம்,
பால்வகையியல்
போன்ற எண்ணிறந்த துறைகளில் இவருடைய ஆழ்ந்த தாக்கம் உணரப்பட்டுளளது
மேலும் தெரிதாவின் சிந்தனை ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது
. இது குறிப்பாக இருப்பியல், அறவியல், அழகியல், விளக்கவியல், மொழிமெய்யியல் போன்ற துறை ஆய்வுகளில் தெரிகிறது.
தெரிதாவின் சிந்தனைத் தாக்கம்
கட்டடவியல், இசையியல்,]
கலை,,
கலை விமர்சனம்
ஆகிய துறைகளிலும் காணப்படுகிறது
ழாக் தெரிதா பிரெஞ்சுத் தத்துவ வாதி.
அவரது நூல்களும் கட்டுரைகளும் மிகப் பெரும் சவால்களை அறிவுலகின் முன் வைத்தது என்பர்.
தெரிதா முன் வைத்த வாதங்களுள் முக்கியமானவை இரண்டு.
ஒன்று. சொற்களும் அவை தரும் அர்த்தங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவல்ல.
இரண்டு, கட்டவிழ்ப்பு வாதம்.
அமைப்பியல் வாத முன்னோடியாகக் கருதப்படும் பேர்டினட் சசூர் எனும் மொழியியல் அறிஞர் சொற்களை
குறிப்பான் (Sign) என்றும்
அர்த்தத்தைக் குறியீடுகள் (Signifier) என்றும்
பிரித்து அவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பிரிக்க முடியாத படி அமைந்துள்ளன என்றார்.
தெரிதா இக் கோட்பாட்டை நிராகரிக்கின்றார்.
சொல்லும் அர்த்தமும் தொடர்புடையன அல்ல.
சொல்லுக்கும் அது தரும் அர்த்தத்திற்குமிடையில் நிரந்தரமான இணைப்பு எதுவுமில்லை.
ஒரு குறிப்பில் அல்லது சொல்லின் அர்த்தம் அக் குறியின் நேரடியாக பிரசன்னமாவதில்லை. என்பது தெரிதாவின் கோட்பாடு.
ஒரு கருத்தைக் கூற ஒரு குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்துகின்றோம் எனினும் அச் சொல் ஏலவே புரிந்து கொள்ளப் பட்ட அர்த்தத்தில் இல்லாது இன்னொரு கருத்திலேயே வருகிறது.
இங்கு அர்த்தம் என்பது திட்வட்டமானதாக இல்லை.
ஒரு வகையில் அர்த்தம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
தொடர்ச்சியான ஊசலாடல் காரணமாக எழுத்தில் அமைந்த சொற்கள் எனும் குறியீடுகளைக் கொண்ட பிரதி (Text) குறியீகளினால் (சொற்களினால்) அர்த்தத்தை தராமல் வாசிப்போர் தரும் அர்த்தத்தினாலேயே அர்த்தம் பெறுகிறது.
பின் அமைப்பியல் வாதத்தில் ஆசிரியன் இறந்து விட்டான். பிரதி தான் இருக்கிறது.
பிரதிக்கு வாசகள் கொடுக்கும் கருத்து தான் எஞ்சுகிறது.
பிரதி எழுதிய ஆசிரியன் நினைக்காததைக் கூட வாசகன் அப் பிரதிக்கு தரலாம் என்பர். ஒரு வகையில் வாசகரின் பிரதிக்கான வியாக்கியானமே வாசிப்பாகும்.
வியாக்கியானம் வாசகரின் அனுபவம், ஞானம், சூழல், அவர் சார்ந்த தத்துவம் என்பவற்றின் அடிப்படையாகவே உருவாகும்
. ஒரு பிரதியை பல வாசகள்கள் தத்தமக்கு ஏற்ப வித்தியாசமாக விளங்கிக் கொள்ளுதலும் சாலும். அவரவர் அதிற் தாம் காணும் கருத்துக்களைக் கொண்டு பிரதியை விளங்கிக் கொள்ளும், அல்லது விளக்க முனையும் தன்மையும் மாறுபடும்.
இதனால் பிரதியின் கருத்துக் காலம்தோறும் மாறும் தன்மையுடையதாகின்றது.
தெரிதா வைத்த இன்னொரு வாதம்
கட்டவிழ்ப்பு வாதம் (Deconstruction) ஆகும்.
சொற்கள் பலருக்கும் பல அர்த்தங்களைக் கொடுப்பதனால் சொற்களுக்கான அர்த்தம் ஊசலாடுகிறது என்பது முன்னரேயே கூறப்பட்டது.
அர்த்தத்தின் இந்த ஊசலாடும் தன்மையினை ஆதாரமாகக் கொண்டு பிரதி வாசிப்பு பற்றியதொரு கோட்பாட்டை கட்டவிழ்ப்பு வாதம் முன் வைக்கின்றது.
குறியீடுகளான சொற்கள் சரியான அர்த்தத்தை தராமையினால் அர்த்தம் ஊசலாடும் தன்மையிலிருந்தாலும் குறியீடுகளின் சுவடுகளை குறிப்பான்களாகிய அர்த்தத்தில் காண முடியும்.
அர்த்த்தின் சுவடுகளைத் தேடிக் கண்டு பிடித்தலே பிரதி வாசிப்பாகும் என்பர் தெரிதா கட்டவிழ்த்துப் பார்ப்பதன் மூலம் பிரதியின் அடித்தளத்தைக் கண்டு கொள்ளலாம்.
பிரசன்னத்தின் கடந்த நிலை என தெரிதாவினால் கூறப்படும் கருத்தாக்கமொன்றுடன் கட்டவிழ்ப்பு முறை தொடர்புடையது.
பிரசன்னமே பெரும்பாலான மெய்யியற் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருந்தது. நிச்சயத் தன்மையின் அளவுகோலும் இதுவே.ஒரு பிரதியின் அர்த்தத்தின் பிரசன்னம் எழுத்தில் தான் உள்ளது என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது.
அர்த்தத்தின் பிரசன்னம் எழுத்தில் மாத்திரமல்ல என்று கூறுவார் தெரிதா.
ஒரு கருத்தைக் கூற பேச்சா எழுத்தா முக்கியமானதா?
என்ற வினாவை எழுப்புவோம்.
பேச்சின் போது அக் கருத்துக்குரியவன் பிரசன்னமாயிருக்கிறான் அவன் உணர்வுகள், எண்ணம் யாவும் அதிகளவு மற்றவருக்குப் பரிமாறப்படுகின்றன. ஆனால் எழுத்தின் போது அதை எழுதியவன் பிரசன்னமாவதில்லை.
பேசுபவனின் பிரசன்னம் பேசப்படும் போது இருப்பதனால் கருத்துத் தெளிவுடன் வார்த்தைகள் வருகின்றன. உணர்வுகள் சைகைகள் அதற்கு உதவிபுரிகின்றன. ஆனால் எழுத்திலோ கருத்து கைநழுவி விடும் அபாயம்
உண்டு.
எழுத்தில் பிரசன்னம் இல்லாது போக அர்த்தத்தின் பிரசன்னமும் இல்லாது போய் விடுகிறது. இதனால் எழுத்தை உயிரோட்டமற்றதென பல மெய்யியலாளர்கள் புறக்கணித்தனர்.
எழுத்தைப் புறக்கணித்து பேச்சை முதன்மைப்படுத்திய வாதத்தை சய்தமைய வாதம் என்று கிண்டல் பண்ணும் தெரிதா வார்த்தை மைய வாதம் என்ற இன்னொரு கருத்தை முன்வைக்கிறார்.
வார்த்தை மைய வாதம் என்பது சொற்களின் அர்த்தத்தைக் கண்டு பிடிப்பதில் விருப்பம் கொண்டதாகும்.குறிகள் சுட்டுகின்ற அர்த்தத்தைக் கண்டு பிடிப்பதன் மூலம் உண்மையைக் கண்டு கொள்ளலாம் என்ற நம்பப் பட்டது.
மூலதத்துவங்களை விமர்சனம் செய்யும் தெரிதா
நன்மை - தீமை,
உண்மை – பொய்
போன்ற எதிர் நிலைப் பெறுமானங்களின் மீதே அவை கட்டியமைக்கப்பட்டுள்ளன என்பார்
. ஆனால் எதிர் நிலைப் பெறுமானங்கள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
இப் பரஸ்பர சார்பு நிலைகளை எடுத்துக் காட்டி மூலதத்துவங்களை கட்டவிழ்ப்பு செய்யலாம்.
கருத்து நிலையில் எதிர் நிலைகளாகக் காட்டப்பட்டுள்ள இவற்றின் முடிச்சுகளைக் கண்டு பிடித்து அவற்றின் கட்டுக்களை அவிழ்த்தல் வேண்டும்.
இதன் முலம் ஒரு பிரதியில் எதிர் நிலைகளாக காட்டப்பட்டவை உண்மையில் எதிர் நிலைகளே அல்ல
. கட்டவிழ்ப்பு முறையினாலேயே அவை ஒன்றுக் கொன்று எதிர் நிலைகளாக காட்டப்பட்டுள்ளன என்பர் தெரிதா.
கட்டவிழ்த்தல் என்பது கட்டிய முறைமையினை அவிழ்த்து உண்மையைக் காண்பதேயாகும்.
இவர் வாதப்படி எல்லாக் கருத்தியல்களும் கட்டப்பட்டுள்ளன.
அதிகாரம், சுதந்திரம், உரிமை, சரித்திரம், அனைத்தும் இதற்குள் அடங்கும்.
கட்டப் பட்ட முறையினை உடைத்து அல்லது தகர்த்துப் பார்த்தல் மூலம் எந்த நோக்கத்திற்காக அவை கட்டப்பட்டன என்பதைக் கண்டு கொள்ள முடியும் என்பதனைக் கட்டவிழ்ப்பு வாதம் கூறுகிறது.
மேற்கூறியவற்றிலிருந்து இரண்டு கருத்துக்கள் மேலெழுகின்றன.
ஒன்று எழுத்திற்கான - பிரதிக்கான அர்த்தம் வாசகனாலேயே தரப்படுகிறது.
இரண்டு கட்டப்பட்ட முறையினை அறிந்து அதனை அவிழ்த்து அது கட்டப்பட்டமைக்கான நோக்கத்தைக் கண்டு பிடித்தல் வேண்டும்.
இக் கருத்துக்களை நாம் கூத்தின் அளிக்கை முறைமைக்கு பொருத்திப் பார்ப்போம்.
மட்டக்களப்புக் கூத்துக்களைக் கட்டவிழ்த்து நோக்கல்
----------------------------------------------------------------------------
கூத்தில் எழுதப்பட்ட பிரதி இருக்கும் ஆனால் பிரதி எலும்புக் கூடுதான். பிரதி கூறாத பல விடயங்கள் நிகழ்த்திக் காட்டப்படும்நிகழ்த்துகை
நிகழ்த்துபவர்கள் பிரதியைப் புரிந்து கொண்டதற்கு ஏற்பவே நிகழும்.
இதனால் நிகழ்த்தும் முறை இடம் தோறும் காலம் தோறும் வேறுபடும். இவ்வகையில் பிரதியின் ஒரு வியாக்கியானமாகவே கூத்து அளிக்கை முறை அமைகிறது. கூத்தின் பார்வையாளர்கள் தமது கருத்தையே கூத்தில் ஏற்றி அதற்கு விளக்கம் தந்து மகிழ்வர்கள் கர்னாடக சங்கீதம் ரசிக்கும் ரசிகள் பற்றிக் கூறும் கலாயோகி ஆனந்த குமாரசாமி
பாடகன் தரம் குறையப் பாடினும் தேர்ந்த ரசிகன் தன் சங்கீத ரசனையை அதிற் செலுத்தி முழுமையான சங்கீத உணர்வைப் பெறுகிறான் என்பர்.
கூத்தின் பார்வையாளரான கிராமிய மக்களும் இவ்வாறே.
இளமைக் காலம் தொட்டு அவர்கள் தாம் பார்த்து உள்வாங்கிய கூத்தனுபவங்களை உள் வாங்கியே அளிக்கையை ரசிக்கின்றார்கள். ஒரு வகையில் அவர்கள் தம் அனுபவத்திலிருந்தே அளிக்கைக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.
மட்டக்களப்பு கூத்துக்களை எழுதிய ஆசிரியர் பெயர் யாருக்கும் தெரிவதில்லை.
இவ்வகையில் மட்டக்களப்புக் கூத்துக்களின் ஆசிரியர்கள் மக்கள் மனதிலிருந்து எப்போதோ மறைந்து விட்டார்கள் அல்லது இறந்து விட்டார்கள்.
எஞ்சியுள்ளது பிரதி தான்.
பிரதிக்கு அண்ணாவியாரும் கூத்துக்காரரும் அளிக்கும் விளக்கமும், அவர்களின் விளக்கத்திற்கு மக்கள் அளிக்கும் விளக்கமுமே கூத்தின் அடி நாதங்களாகும். இவ்விளக்க முறையிலேயே கூத்து அளிக்கை சமூக மயமாகின்றது.
உதாரணமாகப் பின்வரும் பாடல் மட்டக்களப்பின் கமலாவதிக் கூத்தில் மிருகாங்கதன் எனும் அரக்கனுக்குரிய வரவுப் பாடலாகும்.
அண்டமும் கிடுகிடென்ன
அடலலர் அஞ்சியோடக்
கண்டவர் மயங்கக் கண்ணில்
கனலெரி பறக்கவேதான்
மண்டலம் மதிக்கும் மிரு
காங்கத அரக்கன் தானும்
தண்டதைக் கையிலேந்திச்
சபை தனில் வருகின்றானே.
இந்தச் சொற்களுக்கான அல்லது பிரதிக்கான விளக்கத்தை தமிழ் நாட்டு தெருக் கூத்துக்காரர் ஒரு விதமாகவும்
மட்டக்களப்பு கூத்துக் காரர் இன்னொரு விதமாகவும் தருவர் அல்லது வெளிப்படுத்துவர்.
தமிழ் நாட்டுக் தெருக்கூத்தில் உச்சத்தொனியில் பாடி கண்களை அகல விழித்துக் கோபப் பார்வை பார்த்து தண்டைக் கையிலே தூக்கி அடிக்குமாப் போல காலை முன் பின் வைத்துஉதை குத்தி நின்று நாவை வெளியே தெரியும் படி பயங்கரமாக நீட்டி மடித்துக் கடித்து பார்வையாளர்களை பயமுறுத்தும் பாணியில் அரக்கன் நிற்பதன் மூலம் இப்பாடலுக்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது.
மட்டக்களப்பு கூத்தில் வரவுப் பாடலை அரக்கன் பாடி முடித்ததும் "தாகிணங்கிடததிங்கத் தத்துமி' என்ற வேக நடைகொண்ட தாளக் கட்டுக்களை விரைவாகவும், உக்கிரமாகவும், ஆடுவதன் மூலம் அரக்கனின் வேகம், மிடுக்கு, குணாதிசயம், என்பன புலப்படுத்தப்பட்டு இப் பாடலுக்கு இன்னொரு விளக்கம் தரப்படுகிறது.
இவ்வளிக்கைகளைப் பார்க்கும் பார்வையாளரின் விளக்கங்களும் அவ்வரசர்கள் சம்பந்தமாக மாறுபாடடையும்.
மட்/ கன்னங் குடாவில் 1992ம் ஆண்டு அல்லி நாடகம் பார்த்தமையை இங்கு நினைவு கூருகின்றேன். பெண்ணாகிய அல்லியை அடக்க பாண்டவர்கள் படையெடுத்து வருகிறார்கள். சண்டை நடக்கிறது. பெண்ணாக தனியொருத்தியாக நின்று அல்லி முகம் கொடுக்கிறாள்.
எனக்கு அருகிலே அக் கூத்தைப் பார்த்தப்படி இருந்த இரண்டு வயது சென்ற அக் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பாண்டவர்களை இலங்கையின் அரச படைகளாகவும் அல்லியை அவர்களை எதிர்த்துப் போராடும் போராளிப் பெண் களுக்கும் ஒப்பிட்டு வலிமைமிக்க பாண் டவர்களின் படையெடுப்புக்கும் பயப்படாது. அடிபணியாது. அல்லி போரிடும் பாங்கினை இன்றைய தமிழ் இளைஞர் போராட்டங்களுடன் இணைத்துக் கதைத்து ரசித்து அல்லியின் மீறலில் இன்பமுற்று மகிழ்ந்ததை நான் அவதானித்தேன்.
ஒரு கட்டத்தில் அவள் மகா பலவானான வீமனுடன் சண்டையிட்டு அவனைக் கலைக்கும் காட்சியில்
'விடாதபடி ஆளை கலைச்சு விரட்டு'
என்று உற்சாகமூட்டியமையும் ஞாபத்தில் பதிந்துள்ளது.
அப்பெண்கள் பழைய மகா பாரதக் கதையைப் பார்க்கவில்லை.
சமகாலப் பிரச்சினைகளை, தமக்கு உள்ள அனுபவம், அறிவு என்பவற்றின் அடியில் அதன் மேல் ஏற்றிப் புது வியாக்கியானமளித்தே அல்லிக் கூத்தை ரசித்தனர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லிநாடகம் பார்த்த பெண் பார்வையாளர் வேறொரு அர்த்தம் கற்பித்துப் பார்த்திருக்க கூடும்.
தரும புத்திரன் கூத்தில் தருமருடன் சூதாடி துரியோதனன் அவர்களுடன் ஒப்பந்தம் செய்வதும், காட்டுக்கு அவர்களை அனுப்புவதும், காட்டில் அவர்கள் தம் ஆயுதங்களின் துணையுடன் வாழ்வதும், மீண்டும் வந்து ஒப்பந்தப் படி தமக்குரிய நாட்டைக் கேட்பதும், துரியோதனன் ஒப்பந்தத்தை மீறுவதும் அதனாற் பாரதப் போர் நடப்பதுவுமான கூத்து
நிகழ்வுகளை இன்றைய இலங்கை அரசியல் நிலமைகளுக்கு பொருத்திப் பார்த்துப் பாண்டவர்கள் பக்கம் தம்மை அடையாளம் கண்டு தரும புத்திரன் கூத்தைப் பல பார்வையாளர் ரசித்ததை நான் கண்டுள்ளேன்.
பிரதிக்கு அண்ணாவியாரும், கூத்துக்காரரும் ஒரு விளக்கமளிக்க
மக்கள் இன்னொரு விளக்கத்தை அளிக்கும் தன்மையை இங்கு காணலாம்
. ஏழு பிள்ளை நல்ல தங்காள் கூத்தில் அவள் பெண்ணாகப் பிறந்ததால் படும் துயரத்தை, தனது அரிச்சந்திரன் நாடகத்தில் பெண்ணான சந்திரமதி படும் துயரத்தைத் தமது துயரமாகக் கண்டு தம்மைஅப் பாத்திரங்களுடன் இனம் கண்டு கண்ணீர் விடுகின்ற பல கூத்துப் பெண் பார்வையாளர்களையும் நான் கண்டுள்ளேன்.
இங்கெல்லாம் ஆசிரியன் இறந்து விட்டான். அவன் சொன்ன சொற்களின் அர்த்தங்களும் மாறி விட்டன. அச் சொற்களுக்கும் பிரதிக்கும் பார்வையாளரே புதிய அர்த்தம் தந்து இரசிப்பதனையே காணுகின்றோம்.
தமிழ் நாட்டுத் தெருக் கூத்தில் பிரதிக்கு அர்த்தம் தருவதில் கட்டியக் காரன் கூற்று முக்கியமானது
. இடையிடையே தோன்றும் கட்டியக் காரன் மரபு ரீதியான கருத்தைத் தருவதுடன் நகைச் சுவைக்காக கருத்தை திசைதிருப்பியும் விடுவான்
நகைச்சுவையுணர்வு இதனால் ஏற்படுத்தப்படினும் அதனை நாம் பிரதியின் மறுவாசிப்பின் ஒரு பகுதியாகவே கொள்ளல் வேண்டும்.
இவ் வண்ணம் கூத்துப் பார்வையாளரால் மறு வாசிப் பு செய்யப்படுவதற்கு பல நூறு உதாரணங்கள் தர முடியும்
.
தெரிதா கூறியபடி குறிப்பான் தனக்குரிய அர்த்தத்தை தராமல் வேறு அர்த்தம் தருவதை அதாவது பிரதிக்கு வாசகர்கள் போல கூத்தின் பிரதிக்கு பார்வையாளர்கள் வேறு அர்த்தம் தந்து இரசிப்பதனைக் காணுகின்றோம்.
தெரிதா கூறும் கட்டவிழ்ப்பு முறையில் கூத்தினை ஆராய்தல் கூத்தின் கருத்து நிலையின் அடியாளத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
இவ்வாய்ப்பு முயற்சிகள் இதுவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை.
ராஜ்கெளதமன்,
ரவிக்குமார்,
அ. மார்க்ஸ்
போன்றோர் பண்டைய தமிழ் இலக்கியங்களை கட்டுடைத்தல் முறையிற் புரிந்துகொள்ள முயற்சித்துள்ளனர்.
பெரியபுராணம் பற்றிய ராஜ்கெளதமனின் கட்டுரை, அவரது அறம் அதிகாரம் எனும் நூலாகியவை இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
நாடகத்தை அதன் சமூகத் தளத்தில் வைத்து ஆராய்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி,
கூத்தின் கருத்தியலை அதன் சமூகத்தளத்தில் வைத்து இக் கட்டுரையாசிரியர்
மட்டக்களப்பு கூத்தின் சமுக அடித்தளம் எனும் கட்டுரையிலும்
, ஈழத்தமிழ் நாடக அரங்கு எனும் நூலிலும் விளக்கியுள்ளார்.
தெரிதாவின் கட்டவிழ்ப்பு முறையில் கூத்தை இதுவரை யாரும் அணுகவில்லை.
மூல தத்துவங்கள்
நன்மை - தீமை,
உண்மை - பொய்,
தர்மம் - அதர்மம்,
நீதி - அநீதி,
சாவு - வாழ்வு
என்ற எதிர் நிலைப் பெறுமானங்கள் மீதே கட்டியமைக்கப்பட்டுள்ளன என்றும்
அவ் எதிர்நிலைப் பெறுமானங்கள் ஒன்றையொன்னு சார்ந்துள்ளன என்றும் உண்மையில் அவை எதிர் நிலைகளே அல்ல கட்டமைப்பு முறையினாலேயே அவை ஒன்றுக்கொன்று எதிர்நிலையாகக் காட்டப்படுவதனால் கட்டிய முறைமையினைக் கட்டவிழ்த்து உண்மையைக் காணவேண்டும் என்பதும் தெரிதாவின் கட்டவிழ்ப்பு வாதக் கொள்கை என முன்னரேயே கூறப்பட்டுள்ளது.
கூத்தின் கதையினை, கூத்தின் அமைப்பினை, கூத்தின் அளிக்கை முறையினை எடுத்து இதனை நோக்குவோம்.
(தொடரும்)


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7