LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 8, 2018

பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி- 2

பேராசிரியர் சி. மௌனகுரு 
புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற்சி இது.ஒரு நீண்ட கட்டுரை அதனால் ஐந்து பகுதிகளாக கட்டுரையை உடைத்து பதியவுள்ளேன்இது இரண்டாம் பகுதி ஆர்வமுடையோர் வாசியுங்கள்.

தமிழகத் தெருக் கூத்தில் அதிகாரத்திற்கெதிரான குரல் கட்டியக்காரன் மூலமாகத் தெரிய வருகிறது.
சில கூத்துக்களில் கோமாளி மூலமாக வெளிப்படுகிறது.
தெருக்கூத்துக் கட்டியகாரனும் அதிகாரத்திற்கு எதிரான குரலும்
கட்டியக் காரனைக் கோமாளியாகக் காட்டும் மரபும் உண்டு.
தமிழகத் தெருக் கூத்தில் முதல் பாத்திரமாகக் கட்டியக்காரன் தோன்றுவான்.
அவன் முகத்தில் ஒரு பாதிக்கு ஒரு நிறமும், மறு பாதிக்கு இன்னொரு நிறமும், தீட்டப்பட்டிருக்கும்.
பாதி மீசை தான் வைத்திருப்பான்,
கோமாளிக் குல்லா அணிந்திருப்பான்,
உடுப்பும் சர்க்கஸ் கோமாளிகள் போலவே இருக்கும்.
அவனுடைய நடையுடை பாவனைகள் பைத்தியகாரத் தன்மை கொண்டதாக இருக்கும்.
சில வேளை சாதாரண உடையுடன் தோன்றுவான்
இவ்வுடை கூத்து உடையினின்று வேறுபட்டிருக்கும்
இவ் ஒப்பனையும் இடத்துகிடம் வேறுபட்டிருக்கும்
அரசர்கள் கொலுவுக்கு வரும் போது, சில முக்கியமான பிரச்சனைக் கட்டங்களிலும் இக் கோமாளி பிரதான பாத்திரங்களுடன் உரையாடுவான்.
அவர்களை விமர்சனம் பண்ணுவான்
. மக்களுடன் தன் விமர்சனக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வான்.
உதாரணமாகத் துரியோதனன் கொலுவுக்கு வந்து தனக்குரிய விருத்தம் பாடி ஆடி முடித்ததும் கட்டிய காரனை அழைத்து
"டேய், நான் யார் தெரிகிறதா?"
என வினவுவான்.
கட்டியக் காரனிடமிருந்து
"தெரியாதே'
என்ற பதில் தான் வரும்.
"என்ன தெரியாதா?"
என்ற கேட்டுக் சாட்டையால் கட்டியக் காரனை அடித்த பின் தம் வீரதீரங்களை, செயல்களை துரியோதனன் தானே கூற ஆரம்பிப்பான்.
அவற்றை வெட்டி, வெட்டி அவரது அதிகாரத் தொனியை மட்டம் செய்து கொண்டேயிருப்பான் கட்டியக்காரன்,
தொடர்ந்தும் சாட்டையடி வாங்கியபடி ‘டேய நான் திருதராட்டிரன் புத்திரன்; என்று தனது வம்சப் பெருமையை துரியோதனன் கூறினால்
'ஆ' அந்தக் குருட்டு ராஜாவின் மகனா?"
என்று கட்டியக்காரன் கேட்பான்.
"அத்தினாபுரத்திற்கு நான் அரசன்,"
என்று துரியோதன் கூறினால்
"பாண்டவர்களைக் கலைத்து விட்டு ஆட்சி புரிந்த அந்த இடமா?"
என்று கட்டியக்காரன் கேட்பான்.
நாங்கள் குருவம்ச பரம்பரை வீர தீரம்மிக்க 101 பேர் இருக்கிறோம் என்று துரியோதனன் கூறினால்
பாஞ்சாலியின் சீலையை உரிந்த ஆட்களா?" என்று கட்டியக் காரன் கேட்பான்.
இவ்வாறு துரியோதன ஆட்சியாளரின் அதிகாரம் கட்டியக்காரன் என்கின்ற கோமாளியால் அல்லது பைத்தியம் போலத் தோற்றமளிப்பவனால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
இவ்வண்ணமே கட்டியக் காரனால் தருமர், மனைவியை பணயம் வைத்து இழந்த மகா மடையனாகக் காட்டப்படுவார்.
வீமன் பெரும் சாப்பாட்டுக்காரனாகவும்,
இடும்பியை அரண்மனைக்குள் அடுக்காத பேதம் பார்ப்பவனாகவும்,
கண்ணன் பெரும் சூழ்ச்சிக்காரனாகவும்
திரெளபதி பாரதப் போரை நடத்தி அனைவரையும் சாகக்கொடுத்த பெண்ணாகவும்
5பேருக்கு மனைவியாக இருந்தவளாகவும்
கண்ணன் அரசுக்கு ஆசைப்பட்டு தன் சொந்தச் சகோதரர்கட்கு எதிராக நின்றவனாகவும் காட்டப்படுவார்கள்.
இன்னும் கிராமிய வழக்கில் அதிகாரத்திற்கு எதிரான எத்தனை கருத்துக்கள், சொற்களுண்டோ அத்தனையும் கூறி அதிகாரமும் அதிகாரக் கருத்துக்களும் விமர்சனம் செய்யப்படும்.
பைத்தியக்காரன் கூற்று என்று இதனைப் புறந் தள்ளினாலும் அதற்குள் இருக்கும் அதிகாரத்திற்கு எதிரானதும் அறிவு உருவாக்கி விட்ட அதிகாரம் சம்பந்தமான கருத்துருவங்களான திரெளபதி கற்புடையவள், தருமன் பெரும் தருமவான், கள்ணன் பெரு மனது படைத்த கொடையாளி என்பன போன்ற கருத்துருவங்களுக்கு எதிரானதுமான குரலாகவே இதனைக் கொள்ளல் வேண்டும்.
சிவபெருமானைக்கூட கட்டியகாரன் கேலி பண்ணுவான்
இக்கருத்துக்களைப் பார்வையாளர் எதிர்ப்பதில்லை.
மாறாக அதனை இரசித்து அந்த எதிர்ப்பில் தாமும் மகிழ்ந்து இன்புறுவர்.
இங்கெல்லாம் ஒரு நிகழ்வில் அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்கள் மீறப்படுவதனையும், அதனை மீறுவோார் சமூகத்தில் புறம் தள்ளப்பட்டுள்ள பைத்தியக் காரர்கள் போன்ற கோமாளிகள் என்பதும் கணிப்பிற்குரிய ஒரு விடயமாகும்.
ஈழத்துக்கூத்துகளில் அதிகாரத்திற்கெதிரான குரல்
----------------------------------------------------------------------------
ஈழத்தின் கூத்துக் களிலும் அதிகாரம் மேலாதிக்கம் செலுத்துவதனையும் அதிகாரத்திற்கு எதிரான மீறுதல்களையும், எதிர்ப்புக் குரல்களையும் காணமுடிகிறது.
ஈழத்துத் தமிழ்க் கூத்துக்கள் அரசர், புராண இதிகாச நாயகர்கள் பிரபுக்கள், வணிகள் எனப்பட்ட அதிகாரத்துவம் மிக் கோரையும், அவர்களின் வாழ்க்கையையும் , அவர்களின் கருத்தியல்களையும் வெளிப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன.
எல்லாக் கூத்துக்களிலும் அதிகாரத்தை ஞாயப்படுத்துகிற கருத்துக்களையே காண முடியும்.
நாட்டை ஆளும் உரிமை அரச குடும்பத்தோருக்கு மாத்திரமே உண்டு
. அவனது சிறப்பான ஆட்சியினாற்தான் மாதம் மும்மாரி பெய்கிறது.
பத்தாவுக்குப் பணிவிடை செய்வதே மனைவியின் கடமை.
ஆணுக்குப் பெண் அடக்கமானவள். (அல்லிராணி கூட அர்ச்சுனனால் அடக்கப்பட்டாள்)
. கணவனுக்கு மனைவி அடங்கி நடக்க வேண்டும்.
சமூக அமைப்பில் அரசர், பிரபுக்கள் உயர் குடியிற் பிறந்தோரே மேலானவர்கள். சாதாரண மக்கள் குறைந்தவர்கள். அதிலும் விழிம்பு நிலை மக்களான வேடர், பறையர், வண்ணார், குறவர் போன்றோர் இன்னும் குறைவானவர்கள்.
இவ்வண்ணம் அதிகாரத்தை, மேலாண்மையை வலியுறுத்தும் கருத்துக்களே ஈழத்துக் கூத்துக்களில் வலியுறுத்தப்பட்டன.
விழிம்பு நிலை மக்களான பறையர், வண்ணார், வேடர், குறவர், நொண்டி போன்றோர் பகிடிப் பாத்திரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
குடித்துவிட்டு வெறியில் ஆடிக்கொண்டு வருபவனாகப் பறையன் சித்தரிக்கப்பட்டான்.
பெண்டாட்டிக்கு அடிப்பவனாக வண்ணானும், வேடனும், குறவனும் சித்திரிக்கப்படுகின்றனர்.
அதே நேரம் அரசன் சகல நல்ல குணாம்சங்களும் பொருந்தியவனாகவும், மது அருந்தாதவனாகவும் மனைவியுடன் நாகரிகமாகப் பேசுபவனாகவும் சித்திரிக்கப்படுகிறான்.
இது ஒரு வகை அதிகாரத்துவம் (power) மிக்க கருத்தாகும்.
ஆட்சி புரிந்த மேலோரின் கையிலேயே அதிகாரம் இருந்தது. இந்த அதிகாரத்தையும், அதிகாரத்திற்கான கருத்து நிலையையும் அன்றைய
அறிவான புராண இதிகாசங்களும், சமய தத்துவங்களும் அறக்கோட்பாடுகளும் ஞாயப்படுத்தின. இவ் அதிகாரக் கருத்துக்களை மக்கள் உளத்தால் ஏற்றுக் கொண்டனர்
ஆற்றுகை முறைகளிலும் அதிகார வெளிப்பாடு
-----------------------------------------------------------------
தாளக்கட்டு, ஆட்ட முறைகள், உடைகள், ஒப்பனைகள், பாடல் வகை போன்ற அளிக்கை முறைகளிலெல்லாம் இவ் அதிகாரம் செயற்பட்டது.
அழகும், அலங்காரமும், வர்ணப் பகட்டுகளும், பொலிவும் பொருந்திய உடைகள் அரசர் முதலானோருக்கும், பொலிவற்ற, பகட்டற்ற உடைகள் விழிம்பு நிலை மக்களுக்கும் ஒதுக்கப்பட்டன. வடையால் ஆன மாலை அணிந்தபடி பறையன் தோன்றுவான்,
மலர்மாலை அணிந்து மன்னன் தோன்றுவான்.
அலங்காரமான தாளக்கட்டுகள், ஜதிகள், பாடல்கள் என்பன அதிகாரத்திலிருந்தோருக்கும் அலங்காரம் குறைந்த, ஜதிகள் இல்லாத தாளக்கட்டுக்கள், நாட்டார் மெட்டிலமைந்த பாடல்கள் விழிம்பு நிலை மக்களுக்கும் ஒதுக்கப்பட்டன
.
கூத்தின் பிரதியில் இவ்வண்ணம், பாடல்கள், கருத்துக்கள் எழுதப்பட்டிருப்பினும் நிகழ்த்திக் காட்டுகையிற் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், புதியவை பலவும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
புதியவற்றுள் முக்கியமானது நாடகத்தில் வரும் விழிம்பு நிலை மக்களான பறையர், வண்ணார், குறவர், வேடப் போன்றேர் அதிகாரத்தை விமர்சிப்பவர்களாக அதிகாரத்தைக் கேலி பண்ணுபவள்களாக அமைந்துவிட்டமைதான்.
கள்ளைக் குடித்துவிட்டு வெறியிலே ஆடிவரும் பறையன் தன்னை உயர் குலத்தவன் என்றும் தனது பாரம்பரியம் கடவுளருடன் சம்பந்தப்பட்டது என்றும் கூறுவான்.
அதிகாரத்திலுள்ளோரையும், ஆளும் வர்க்கத்தையும் கேலி செய்வதாக அவன் கருத்துக்கள் அமையும். பறையனுக்குரிய வரவுத் தாளமும், வரவுத் தருவும் முடிந்த பின்னர் அண்ணாவியார் பறையனுடன் உரையாடுவார். எழுத்துப் பிரதியில் இவ்வுரையாடல் இடம் பெற்றிருப்பதில்லை.
புதிதளித்தலாக (improvisation) இவ்வுரையாடல் அமையும். பறையனுக்கும் அண்ணாவியாருக்கும் நடக்கும் உரையாடல் நகைச்சுவை மிகுந்ததாயிருக்கும்.
அதில் அரசர்களையும், ஆளும் வகுப்பையும், அதிகாரத்தையும், அதிகாரப்பட்டு நிற்கும் பழக்கவழக்கங்களையும், நடைமுறைகளையும் மரபுகளையும் பறையன் கேலி பண்ணுவான். தூஷண வார்த்தைகளையும் தாராளமாகப் பரிமாறிக்கொள்வான் இவையெல்லாம் முடிந்து பறையன் அரசன் கொலுவுக்குச் செல்வான்.
அரசனுக்கு முன்னால் வந்ததும் நேரே நின்று அரசனை வணங்காமல் அரசனுக்குத் தனது பின்பக்கத்தைக் காட்டியபடி பின்பக்கமாக முதுகிலே இரு கைகளையும் கூப்பி வணங்குவான்.
நகைச் சுவையாக இச்செயல் தென்பட்டு சபையோருக்கு நகைப்பை உண்டு பண்ணினும் உயர்ந்த அதிகாரத்தைக் கேலி பண்ணும் ஒரு செயற்பாடே இது.
இராம நாடகத்திலே வரும் வண்ணான் இராவணன் அதிகாரத்தின் கீழ் இருந்த சீதையின் கற்பு பற்றி கேள்வி எழுப்புவான்.
மற்றவன் வைத்திருந்த பெண்ணை இராமன் ஏன் ஏற்றுக்கொண்டான் என்று கேட்டு அதிகாரம் வகுத்த அறநெறியை கிண்டல் பண்ணி இராமனை விமர்சனம் பண்ணுவான்.
வனவாசம் எனும் கூத்தில் வரும் வேடன் (சிவன்) வேடர்களின் சிறப்பியல்புகளை இராஜ பரம்பரை கூறுவது போலக் கூறுவதுடன், அருச்சுனனைச் சந்திக்கும்போது அருச்சுனனைக் கேலி பண்ணும் சொல்லம்புகளை வீசுவான்.
குருவினிற்காய்த் துருபதனைத் தேரிற் கட்டிக் கொடுத்தவனோ குரு குலத்திற் பிறந்த நீயோ அருமை பெறும் ஏகலைவன் விரலை வாங்கும் ஆண்பிளையோ காண்டவத்தை எரித்த நீயோ ஒரு முனிக்காய் வேடர் தமைக் கொன்ற நீயோ உயர்தனுவில் விஜயன் என்றது உன்னைத்தானோ?
என்று வேடன் அருச்சுனன் முகத்திற்கெதிரே வீசும் வார்த்தைகள் முக்கியமானவை
. துருபதன் திரெளபதியின் தந்தை. திரெளபதியைத் திருமணம் முடிக்குமுன் துரோணருக்காக துருபதனை தேரிற் கட்டிக்கொண்டு வந்தவன் அருச்சுனன். பின் அத்துருபதனின் மகளையே வெட்கம் கெட்டு மணந்து மாமனாக உறவும் கொண்டாடியவன் அருச்சுனன். இப்படிச் செய்த உனக்கு குருகுலம் என்ற பெருமை வேறா? என்று நக்கல் பண்ணுகிறான் வேடன்.
வில்லாண்மையில் தனக்கு நிகரான வேடனான ஏகலைவன் விரலைத் துரோணரைக் கொண்டு வாங்குவித்த பிறகும் ஆண்மகனாக உலவும் கோழை என்பதனை அத்தகைய ஆண்பிளை நீதானோ என்று சொற்கள் மூலம் கிண்டல் பண்ணுகிறான் வேடன்.
சத்திரிய தர்மம் என்ற அதிகாரம் சாதாரண வேடனான ஏகலைவனைப் பழிவாங்கிய கதை அது. அது இங்கு விமர்சிக்கப்படுகிறது.
காண்டவ வனம் நிஸாதர் என்ற காட்டுவாசிகளான வேடர் வாழ்ந்த இடம். அந்த காட்டை அழித்தவனும் அருச்சுனன்தான்
. காண்டவ தகனம் இங்கு அழிவைத் தந்த அதிகார நிகழ்வாகவும், அதைச் செய்த அருச்சுனன் ஆண்மையுள்ள ஒருத்தன் அல்ல என்றும் கிண்டல் பண்ணப்படுகின்றது.
இங்கெல்லாம் அருச்சுனன் பற்றிய அதிகாரம், அருச்சுனன் பற்றிய பெருமைகள், அருச்சுனன் பற்றிய அதிகாரத்துவம் மிக்க கருத்துகள் யாவும் சிறுமையானவையாகக் கூறப்படுகின்றன.
ஆண்மகனா?
உயர் தனுவில் விஜயன் என்றது உன்னைத்தானோ?
என்ற வினாக்கள் மூலம் நிறுவப்பட்ட அதிகாரத்தையும் அருச்சுனனையும் வேடன் கேலி செய்கிறான்.
மகிடிக்கூத்தில் அதிகாரத்திற்கு எதிரான குரல்
----------------------------------------------------------------------
மட்டக்களப்பு மகிடிக் கூத்து அதிகாரத்திற்கு எதிராகக் குரல் தரும் ஒரு கூத்தாகும். அதனை ஓர் அதிகார எதிர்ப்பு அரங்கு எனலாம். மட்டக்களப்பில்
3 வகையான மகிடிக் கூத்துகள் உள்ளன
. முதலாவது வகை மகிடிக் கூத்தில்
அதிகாரம் மிக்க பிராமணர் பகிடி பண்ணப்படுகின்றனர்.
பிராமணன் தோற்றத்திலும், செயலிலும் கேலி பண்ணப்படுகிறான். அவனுக்கு வீங்கிய விதை (ஒதம்) உண்டு. அதைத் துாக்கிக் கொண்டு நடக்க முடியாமல் அவன் நடப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவனது பெரிய விதையை ஆசுவாசப்படுத்த ஒரு பையன் அதற்கு விசிறிக் கொண்டு வருகிறான். இடைக்கிடை விசுறுவது போல அதற்கு அடித்து பிராமணனை நோப்படுத்துகிறான் பையன்.
அதிகாரம் மிகுந்த பிராமணர்களும் அவர்களின் மந்திரங்களும், அறிவும் மகிடிப் போட்டியில் குறவர்களாலும் குறவர் தலைவர்களினாலும் வெற்றி கொள்ளப்படுகின்றன.
இரண்டாவது வகை மகிடிக் கூத்தில்
பிராமணன் பகிடி பண்ணப்படுவதுடன் அங்கு மகிடி பார்க்க வரும் வெள்ளைக்கார துரையும் துரைசாணியும் பகிடி பண்ணப்படுகின்றனர். வெள்ளைக்காரன் தன் துப்பாக்கியாற் கொல்ல முடியாத புலியை வேடன் தன் அம்பினாற் கொல்லுகிறான்.
மூன்றாவது வகை மகிடிக் கூத்தில்
வகுத்தய்யாமார் கேலிக் குள்ளாக்கப்படுகிறார்கள். வகுத்தய்யாமார் என்பது உழைக்காமலிருந்து வயிறு பெருத்த பணக்காரராகும்.
வந்தராய்யா பெருமாள் வந்தராய்யா வானமுட்டி வகுத்து ஐயா வந்தரய்யா
என்று தொந்தி இங்கு கேலிக்குள்ளாக்கப்படுகிறது.
தொந்தி அதிகாரத்தின் சின்னம்
. தொந்தியே இங்கு பகிடிக்குள்ளாக்கப்படுகிறது
. அத்தோடு வேடன் பெரியவர்களையும் அதிகாரத்திலிருந்தோரையும் பகிடி பண்ணுகிறான்
. பெரிய தெய்வங்களுக்குப் பதிலாக தான் வணங்கும் குறும்பறை, நெட்டை வைரவரைப் புகழ்கிறான்.
அதற்குப் படைக்கும் முட்டைப் பொரியல், சாராயத்தைப் பெரிதாகக் கூறுகிறான்.
இங்கெல்லாம் அதிகாரத்திற்கு எதிரான குரல்களையும், அதிகாரமிக்கவர்களும், அதிகாரக் கருத்துக்களும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதையும் காணுகிறோம். அதனைச் செய்வோர் சமூகத்தில் விழிம்பு நிலை மக்களாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட கோமாளிகள், வண்ணார், வேடர், பறையர் குறவர் ஆகியோராகவும் காணப்படுகின்றனர்.
அதிகார மீறல்
-------------------------------
பூக்கோ கூறியதுபோல அதிகாரத்தை மீறும் தன்மையை இக்கூத்துக்களிற் காணுகிறோம்.
இது பைத்தியக்காரக் கருத்துக்களாக அன்று கணிக்கப்பட்டுச் சிரிப்பு ஏற்படுத்தினும்
சமூக விமர்சனம் என்ற வகையில் மிக முக்கியமானவையாகும்.
இவ்வகையில் பூக்கோவின் அதிகாரம், அதிகார மீறல், பைத்தியக்காரர் என ஒடுக்கப்பட்டோரின் ஞானக் கருத்துக்கள் என்ற கருத்தாங்கங்கள் கூத்தினைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

(தொடரும்)


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7