இக்கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது.
கிழக்குமாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நியாயமற்றமுறையில் நேர்முகத்தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சாத்திகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றவண்ணம் இருக்கின்றன.
இது தொடர்பில் தாங்கள் நியாயமான முறையில் நேர்முகப்பரீட்சையும் நியமனங்களும் வழங்குவதற்கு ஏதுவாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கின்றேன்.
1-முகாமைத்துவ உதவியாளர்ஆட்சேர்ப்பிற்கு வெளியிடப்பட்ட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ விளம்பரத்தில் வெற்றிடங்கள் மாவட்ட ரீதியான இனவீதாசாரமுறையில் நிரப்பப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது இலங்கையில் எந்த மாகாணத்திலும் இல்லாத அடிப்படை மனித உரிமை மீறுகின்ற ஒரு விளம்பரம் என கருதுகிறேன்.
2- பல்லினங்கள் கலந்து வாழும் வடக்கு , மத்திய, மேல், வடமத்திய போன்ற மாகாணங்களில் இவ்வாறு அடிப்படை மனிதஉரிமை மீறும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. அவ்வாறு கோரப்பட்டிருந்தால் குறித்த மாகாணங்களின் இனவீதாசாரத்திற்கேற்பவே முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் அமைந்து இருக்கும்.
3-மத்திய அரசாங்கத்தால் கோரப்படுகின்ற எந்த வேலைவாய்ப்புக்கான வர்த்தமானியிலும் இனவீதாசாரஅடிப்படையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தல் வருவதில்லை. அதே போன்று 2013 இடம்பெற்ற கிழக்குமாகாணசபையின் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்திலும் இனவீதாசாரம் பற்றி குறிப்பிட்டிருக்கவில்லை.
4- 2013ஆம் ஆண்டு திறமை அடிப்படையில் ஆட்சேர்ப்புச்செய்வதற்கான விளம்பரங்கள் கோரப்பட்டிருந்தும் உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத விநோதமான முறையாக இனரீதியான சமப்படுத்தல் முறையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் முற்றுமுழுதாக புறக்கணிப்பட்டு இருந்தார்கள். சட்டத்தின் உதவியை நாடிய பரீட்சாத்திகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் ஏனைய பரீட்சாத்திகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு அவர்களுக்கான நியமன வாய்ப்பு பறிக்கப்பட்டிருந்ததை தங்களின் நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
5-முன்னர் நடைபெற்றது போலவே சமப்படுத்தல் செயற்பாடு; அரச உத்தியோகத்தர் மட்டத்தில் இடம்பெறுவதானால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்களின் இனங்களே அதிகளவாக வாழ்கிறார்கள் அந்த அடிப்படையில் ஆளுநர்.பிரதமசெயலாளர்.மற்றும் அரசாங்க அதிபர்களை தமிழ்பேசும் இனங்களை சேர்ந்தவர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.அவற்றில் இனரீதியான சமப்படுத்தலை பார்க்காத போதிலும் அரச உத்தியோகத்தர்களில் மட்டும் இனவீதாசாரம் பார்ப்பதும் அதை சமப்படுத்தும் முயற்சி என்று ஏழை இளைஞர் யுவதிகளின் வயிற்றிலடிப்பதும் நியாயத்திற்கு முரணானது.
6- நிரப்பப்படவிருக்கும் மாகாணத்திற்குரிய மொத்த வெற்றிடங்களோ, மாவட்ட ரீதியான வெற்றிடங்களோ விளம்பரத்தில் பகிரங்கமாக குறிப்பிடாமல் விட்டிருப்பது; ஆளுநர்செயலகம், மாகாணபொதுச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் மாகாணபொது நிர்வாக திணைக்களம் ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மையை சந்தேகம் கொள்ள வைக்கிறது.
7-இச் செயற்பாடானது கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இனரீதியான சமப்படுத்தலைப்போல கொடுமையான மனித உரிமை மீறும் செயற்பாட்டை ஒத்ததான நடைமுறைப்படுத்தலுக்கான முனைப்பாக இருக்குமோ என பரீட்சைக்கு தோற்றியவர்களையும் பொது மக்களையும் அச்சம் கொள்ளவைக்கிறது.
8- கிழக்கிலும் பெரும்பாண்மையாக தமிழ் மக்களும் வாக்களித்து ஏற்படுத்திய நல்லாட்சியின் அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மதிப்புக்குரிய தாங்கள், கடந்த எதேச்சதிகாரமான ஆட்சியில் இடம்பெற்றதை போன்ற அடிப்படை மனித உரிமை மீறும் செயற்பாட்டை ஒத்த நடவடிக்கைக்கு துணைபோகமாட்டீர்கள் என நம்புகிறோம்.
9- நடைபெறவிருக்கும் முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தில் எவரும் பாதிக்காவண்ணம் ஆககுறைந்தது விளம்பரத்தில் குறிப்பிட்டதை போலவாவது நியமனங்களை வழங்குவதற்கான நியாயமான நடவடிக்கையை தாங்கள் எடுக்கவேண்டும் என்று பாதிக்கப் பட்டிருக்கும் பரீட்சாத்திகள் சார்பாக கேட்டுக்கொள்வதோடு. எதிர்காலத்தில் மாகாணத்தின் நியமனங்களை திறமை அடிப்படையில் வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம அவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்ட்டுள்ளது.
அ . அச்சுதன்
