
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை வரும் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு பெங்களூரு சிறைத் துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவினர், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். சசிகலாவுக்கு எதிரான வழக்குகள், எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த வழக்கில், கடந்த 2017 ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலிக் காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, அந்த ஆவணங்களில் கையெழுத் திடுவது போன்ற சில நடை முறைகள் பின்பற்றப்படவில்லை.
இதையடுத்து, சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக கடந்த நவம்பர் 30-ம் தேதி அவரை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக சசிகலாவை சிறைத் துறையினர் ஆஜர்படுத்தவில்லை.
இந்நிலையில், சசிகலாவை வரும் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு பெங்களூரு சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





