LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 2, 2018

நான் யார்? -2

பொதுவாக நம்மில் பலரும் தமக்காக வருந்துவதை விடவும் மற்றையோருக்காக வருந்துவதுதான் அதிகம். பல வேளைகளில் அதில் நாடகமும் இருக்கும், சில வேளைகளில் அதில் உண்மையும் இருக்கும். வெளிப்படையாக ஒருவரை அறிய முற்பட்டு அவரைப்பற்றிக் கூறுமாறு கேட்டால் பெயர், ஊர், படிப்பு, தொழில் இப்படியான மேல்மட்ட தகவல்களையே முன்வந்து தெரிவிப்பார்களே தவிர, தாம் உண்மையில் யார், தமது குணாதிசயம் என்ன, வாழ்வின் நோக்கமென்ன, தாம்; கண்டு கொண்ட அனுபவங்கள் எவை போன்ற ஆழமான விடயங்களை எடுத்தச் சொல்வதில்லை. பக்கத்திலிருப்பவர் யார் என்று கேட்டால் விபரங்கள் மடை திறந்த வெள்ளம்போல் பாய்ந்து வரும்.  
மனிதனுடைய வாழ்வில் உண்மையான முன்னேற்றம் காண வேண்டுமானால் அவன் தன்னைத் தானே அவ்வப்போது எடைபோடுவது அவசியம். தன் வாழ்வை ஒரு முறை திரும்பிப் பார்த்து மீளாய்வ செய்வது அவசியம். அப்போதுதான் நாம் யார் என்று பிறருக்கு எடுத்துச் சொல்ல துணிவு வரும். அதுமட்டுமல்ல,..
இதன் மூலமாகத்தான் தன்னில் காணக் கூடிய குறை நிறைகளைக் கண்ட கொண்டு அதிலிருந்து விடுபடவோ அல்லது மேலும் மேம்பாடடையவோ முடியும். எனக்குள்ளே தெரிகின்ற கறைகளையும், குறைகளையும் இனங்கண்டு அகற்றிவிட முயலும்போதுதான் மனிதன் புனிதன் ஆகின்றான். நமது தவறுகளையும், பாவங்களையும் இனங்கண்டு கொள்ளாதவரையிலும், நம்மால் வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய முடியாது. அதாவது, நமது தவறுகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நாம் விடுபட்டு, ஒரு மேலான வாழ்வைக் கண்டு கொள்ள முடியாது. அடுத்தவர் நமக்குச் செய்கின்ற தவறுகளைப் பெரும்பாலும் நாம் பொறுத்தக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட நாம், எப்படி மற்றவர்கள் நாம் செய்யும் தவறுகளையும், பிழைகளையும் மன்னிக்க வேண்டும் என்றோ, பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியும்?  அடுத்தவர்களை மட்டுமல்ல நம்மை நாமே மன்னிக்கவும் முன்வரவேண்டும். அப்படி மன்னிக்கின்றதுடன் நின்றுவிடாது இன்னுமொரு தடவை அதுபோல மன்னிக்க வேண்டிய நிலiமை ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு நமக்குத் தேவையானது துணிவு, வருந்துதல், திருந்துதல், அர்ப்பணிப்பு, நம்பிக்கை ஆகும். எமது மனத்தின் இருண்ட பாகத்தில் நமது குறைகள், பாவக் கறைகள், தவறுகள் தப்புக்கள் பேயாட்டம் போடுகின்றன. அதைப் பார்ப்பதற்கு நமக்குத் தைரியம் தேவை. அங்கே நாம் காணும் நம்மைக் கண்டு கொள்ளும் துணிச்சல் நமக்குத் தேவை! அடுத்து, அந்த விரும்பத்தகா அம்சங்களை நம்மிலிருந்து அகற்றிவிட அவை தவறுதான் என்பதை ஏற்றுக் கொண்டு அவற்றுக்காக வருத்தப்பட வேண்டும். அவற்றால் மற்றவர்கள் பாதிக்கபட்டிருந்தால் அவற்றுக்காக வருந்துதல் வேண்டும். அதிலிருந்தும் விடுபட்டு திருந்தி வாழும் ஆசை வேண்டும். என்னால் அவற்றிலிருந்து விடுபட முடியும் என்கின்ற நம்பிக்கை வேண்டும், அதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கவும் வேண்டும். தன்னைத் திருத்திக் கொள்ள விரும்பி அதற்காக உழைக்கின்ற ஒருவனுக்குத்தான் இறைவன் கை கொடுக்கின்றார். 
புயலைக் கண்டு அஞ்சி , அதன் தாக்கத்தினின்றும் தப்புவிக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு செபிப்பவன் வேண்டுதல் கண்டு இறைவன் அந்த புயலைத் தடுத்து நிறுத்தி விடுவதில்லை. மாறாகத் தன்னை நம்பிக்கையோடு தஞ்சமடைந்தவனைப் பாதுகாப்பாக அந்தப் புயலினூடாகக் கடந்து செல்லப்பண்ணுகின்றார். இவ்வாறுதான் நாம் எமது குறைகளையும் பாவங்களையும் களைந்துவிட விசுவாசத்தோடும் அர்ப்பணிப்போடும் முனைந்து நிற்கின்றபோது இறைவனும் அந்த மயற்சிகளினூடாக நாம் புது வாழ்வு பெற வழி செய்கின்றார். அதற்கேற்ற காலமாகவே இந்த தபசு காலம் நம் முன்னே வைக்கப்படுகின்றது. இதுவே மாற்றத்திற்கான வசந்த காலம்.  புதுப்பொலிவுள்ள மனிதராக நாம் மாறியமைய பொருத்தமான தருணம் இதுவே. 
நாம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் புதிய வாழ்வைத் தொடங்க என்றுமே காலம் கடந்துவிடுவதில்லை. அது நமக்கு முன்பாகப் பலப்பல சந்தர்ப்பங்களை முன்வைத்துக் கொண்டேயிருக்கும். துணிவுடன் அவற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்வது நமது புதிய வாழ்வுக்கு அடித்தளமாக அமையும். 
இறைவன் நமக்கு தந்துள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி புதுப் பிறவிகளாக நமது வாழ்வை மாற்றியமைக்க முன்வருவோம். இவ்வாறாக நம் குறைகளை, பாவங்களைத் தவறுகளை மாற்றிக் கொள்ள மறுப்போமேயாகில் அந்தக் குறைகளும், பாவங்களும், தவறுகளும் நம்மையே மாற்றித் தம்பக்கமாக இழுத்துக் கொள்ளக் கூடிய நிலையும் நம் வாழ்வில் ஏற்பட்டுவிடக் கூடும்.  பிறகு வருந்தவும், திருந்தவும், புது மனிதர்களாக ஏற்றம் காணவும் வாழ்வில் வழியே இல்லாமலும் போய்விடவும் கூடும். ஏழு முறையல்ல ஏழு எழுபது முறை நம்மை மன்னிக்கின்ற தேவன் நம்மோடிருக்கின்றார். நம்;முயற்சியில் நாம் பிழைத்துப்போனால்; அவர் மன்னிப்பார். இன்னுமொரு வாய்ப்பினை வழங்குவார். அது நாம் உண்மையான அர்ப்பணிப்புடன் முயல்கின்றோமா என்பதைப் பொறுத்தேயிருக்கிறது என்பதை நினைவிற் கொள்வோம்.

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7