சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மூன்றாவது முறையாக திறக்க உள்ள நிலையில் அங்கு 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சூழ்நிலையில் பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். எனினும் அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுப் பெண்கள் வரை சாமி தரிசனம் செய்ய நூற்றாண்டுகளாகத் தடை இருந்தது. இந்தத் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இளம் வழக்கறிஞர்கள் அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டவர் திருப்தி தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 28 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பல்வேறு நகரங்களில் பேரணிகள், போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தபிறகு மூன்றாவது முறையாக ஐயப்பன் கோயில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிஅளவில் நடை திறக்கப்படுகிறது. கோயில் மரபுகளில் எந்தவித மாற்றத்தையும் செய்யக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கடுமையாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடையூறு செய்யவே
விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கையில், ''10 வயதிலிருந்து 50 வயதுவரை உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு நூற்றாண்டுகள் பழமைமிக்க கோயிலின் புராதன மரபுகள் அனுமதிக்கவில்லை.
இதை மதிக்காமல் விதிகளை மீறி திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்துள்ள ஆறு பேர்கொண்ட குழுவினர் வந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேறவும், சபரிமலை கோயிலுக்குச் செல்லவும் பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர் (தேசாய்) தரிசனம் செய்ய வரவில்லை. பக்தர்கள் யாத்திரை சென்று தரிசிக்க உள்ள சபரிமலையின் அமைதியான சூழ்நிலையை இடையூறு செய்யவே வந்துள்ளார்.''
இவ்வாறு பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெண்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் என பெரிய அளவில் கூடி விமானநிலையத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்டனர். அவர்கள் தொடர்ந்து ஐயப்பன் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் சூழலை உணர்ந்த காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். காவல் அதிகாரிகள் தேசாய் மற்றும் எதிர்ப்பாளர்களுடன் விவாதங்களை நடத்தினர். ஆனால் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.
தரிசிக்காமல் திரும்பமாட்டேன்
தொலைபேசி மூலம் செய்தி ஊடகத்திடம் பேசிய தேசாய், ''ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்யாமல் மகாராஷ்டிராவுக்கு திரும்பிச் செல்லமாட்டேன். என்னுடன் வந்திருப்பவர்களுக்கும் சேர்த்து பாதுகாப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை கேரள அரசின்மீது எனக்கு உள்ளது.
உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பளித்தால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டியது மாநில அரசு மற்றும் காவல்துறையினரின் பொறுப்பு ஆகும்.
இவ்வாறு திருப்தி தேசாய் தெரிவித்தார்.
விமான நிலையத்திற்கு அருகே உள்ள டாக்சி டிரைவர்கள், ''விமான நிலையத்திற்கு வெளியே தேசாயையும் அவரது சக ஆர்வலர்களையும் அழைத்துச் செல்ல மாட்டோம்'' என்று தெரிவித்தனர்.
சூழ்நிலையைச் சமாளிக்க விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பெரும் எண்ணிக்கையிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருப்தி தேசாய் தெரிவிக்கைதில்
வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்று பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதைக் கையில் எடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பூமாதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் அதில் வெற்றி பெற்றார். அனைத்துப் பெண்களும் தர்ஹாவுக்குள் நுழைவதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுப் பெண்கள் வரை சாமி தரிசனம் செய்ய நூற்றாண்டுகளாகத் தடை இருந்தது. இந்தத் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இளம் வழங்கறிஞர்கள் அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டவர் திருப்தி தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பல்வேறு நகரங்களில் பேரணிகள், போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பெண்கள் கோயிலுக்கு செல்வதில் தடைவிதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
இந்நிலையில், பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் முன்பு கூறியதுபோல், தீபாவளி முடிந்தபின் சபரிமலைக்கு செல்வேன் என்று தெரிவித்திருந்தார். அதுபோல், வரும் 17-ம் தேதி சபரிமலைக்கு வருவதை அவர் இன்று உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ள திருப்தி தேசாய், வரும் 16-ம் தேதி நான் உள்ளிட்ட 5 பெண்கள் கேரளாவுக்கு வருகிறோம் என்றும், 17-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு சாமிதரிசனம் செய்யப்போகிறோம். நாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்குத் திருப்தி தேசாய் அளித்துள்ள பேட்டியில், வரும் 16-ம் தேதி நான் உள்பட 6 பெண்கள் கேரளாவுக்குச் செல்கிறோம். 17-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருக்கிறோம். சபரிமலைக்குப் பெண்கள் செல்ல உச்ச நீதிமன்றம் எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. எங்களை யாரும் தடுக்க முடியாது. எந்த எதிர்ப்புகள் வந்தாலும் கோயிலுக்குச் செல்வோம். ஆன்-லைனில் எந்தவிதமான முன்பதிவும் செய்யவில்லை. சபரிமலைக்குச் செல்வது தொடர்பாகப் பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன்,கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பேரா ஆகியோருக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன் யாரும் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கோயிலின் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்தவரும், கோயில் ஆர்வலருமான ராகுல் ஈஸ்வர் கூறுகையில், கோயிலின் கட்டுப்பாட்டை மீறி எந்தப் பெண்கள் வந்தாலும் அவர்கள் காலில் விழுந்து கோயிலின் விதிமுறைகளை மீறாதீர்கள் என்று கோருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மண்டல பூஜைக்காக வரும் வெள்ளிக்கிழமை சபரிமலை ஐயப்பயன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அதன்பின் 2019-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வரை திறந்திருக்கும். இடையே சில நாட்கள் மட்டும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
