LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 17, 2018

கஜா புயல் ...... கரையை கடந்தது.



‘கஜா’ புயல் நேற்று அதிகாலை 12.20 மணி முதல் 2.30 மணி வரை நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே தீவிர புயலாக மாறி கரையை கடந்தது.
கஜா புயல் பரப்பளவு விட்டம் 26 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இருந்தது. இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் மிக கடுமையாக கோர தாண்டவம் ஆடி விட்டது.
கஜா புயல் கரையை கடந்தபோது 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் டெல்டா மாவட்டங்களை புயல் புரட்டி போட்டு விட்டது. சில பகுதிகளை கஜா புயல் வெறித்தனமாக சூறையாடியது.
டெல்டா மாவட்டங்களில் 29,500 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 40,820 பெரிய மரங்கள் வேரோடு விழுந்து விட்டன. 11,512 குடிசை வீடுகள் நாசமாகிவிட்டன.
நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டன. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 102 துணை மின் நிறுவனங்கள், 495 மின் கடத்திகள், 205 மின் மாற்றிகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டன. டெல்டா மாவட்டங்களில் நேற்று நடந்த கணக்கெடுப்பில் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்சார வயர்கள் அறுந்து விழுந்துள்ளன.
இதன் காரணமாக டெல்டா மாவட்ட மக்கள் இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மின்சாரம் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் தகவல் தொடர்பும் முடங்கி உள்ளது. சமீப ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்போன் சேவைதான் மிக முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. மின்சாரம் இல்லாததால் செல்போன் சேவைகள் 90 சதவீதம் நடைபெறவில்லை.

இதனால் டெல்டா மாவட்ட மக்கள் வெளியூரில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டெல்டா மாவட்ட மக்கள் முற்றிலும் முடங்கியுள்ளனர்.
குறிப்பாக வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொலை தொடர்பு 100 சதவீதம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு மொபைல் செல்போன் கோபுரங்கள் மூலம் தொலை தொடர்பு வசதிகளை தற்காலிகமாக அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளார்கள்.
டெல்டா மாவட்டங்களில் மின்சார இணைப்பை உடனே வழங்குவதற்கு முன்னுரிமை கொடுத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 11 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் புதிய மின் கம்பங்கள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது தவிர துணை மின் நிலையங்களை சீரமைத்து மின் கடத்திகள், மின் மாற்றிகளை பொருத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏற்கனவே மின் வாரியம் உள்கட்டமைப்பு பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்ததால் மின் உபகரணங்களை கொண்டு செல்லும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
என்றாலும் டெல்டா மாவட்டங்களில் மின் இணைப்பை முழுமையாக திரும்ப பெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பகுதி வாரியாக மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை கொடுத்து வருகிறார்கள்.
கஜா புயல் கரையை கடந்தபோதும் அதன் பிறகு தரை வழியாக கேரளாவுக்கு நுழைந்த போதும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களை கஜா புயல் வேட்டையாடி விட்டது.
இந்த 3 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் நாசமாகி விட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 417 மையங்களில் சுமார் 82 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கஜா புயலின் ஆக்ரோ‌ஷ தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது. 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 36 பேர் உயிரிழந்ததாகவும், 49 பேர் உயிர் இழந்து விட்டதாகவும் சில அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறை, மேலாண்மை, கால்நடை, மீன்வளம், மின்சாரம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள். சில இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய சீரமைப்பு பணிகள் நடந்தன.
இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் உயிர் இழப்பு தவிர அரசு சொத்துக்களுக்கும், தனி நபர் சொத்துக்களுக்கும் எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற சேத விவரங்கள் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிய ஓரிரு நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
டெல்டா மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் வருவாய்த் துறையினர் நிவாரண பணியையும், சேதம் கணக்கெடுப்பு பணியையும் செய்து வருகிறார்கள். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகுதான் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் கோர தாண்டவம் எந்த அளவுக்கு நடந்து இருக்கிறது என்ற முழு விவரமும் தெரிய வரும்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7