கஜா புயலின் பாதிப்பை அடுத்து தமிழகத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் மற்றும் சேதம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் நவம்பர் 11 அன்று, வங்கக் கடலில் உருவான புயலுக்கு 'கஜா' எனப் பெயரிடப்பட்டது. தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழக அரசு 'கஜா' புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாகச் செயல்பட்டது. பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஏறத்தாழ 82 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேரோடு விழுந்தன. பல இடங்களில் குடிசைகள் சேதமடைந்தன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கஜா புயலினால் தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், கரூர், கடலூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. புயலினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புயலினால் 102 மாடுகளும் 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. மாடுகளுக்கு ரூ 30 ஆயிரமும் ஆடுகளுக்கு ரூ. 3000 நிவாரணமாக வழங்கப்படும். சேதமடைந்த விவசாய பயிர்கள் குறித்துக் கணக்கிடும்படி வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்படும். அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பலர் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்திக் கண்காணித்து வருகின்றனர். சேதமடைந்த பகுதிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சீர் செய்து வருகிறது இதற்குப் பொதுமக்களும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
