
இன்று உலகின் போக்கு எல்லாம் குறிகிவிட்டது. எவருக்கும் நேரம் இல்லை என்ற நிலையிலுள்ளனர். ஒரு நிகழ்விற்கு சென்று மணிக்கணக்கில் செலவிட எவருக்கும் விருப்பமில்லை. இந் நிலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லும் ஊடகமாக இன்று குறும்படங்கள் இருக்கின்றன. இன்றைய இளைஞர்களும் அதிகமாக குறும்படங்களின் பக்கம் தங்களது கவனத்தை திசை திருப்பியுள்ளனர். தரமான குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் பெறுகின்றனர். சமூகவிரோத செயற்பாடுகளில் இருந்து இளைஞர்களை திசை திருப்பவும் அவர்களை மீட்டெடுக்கவும் இவ்வாறான கலை முயற்சிகள் அவசியமாகும்.
இவ்வாறு கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவினால் பெண் குறும்பட இயக்குநர் செல்வி கஜானாவின் ஈடாட்டம் குறும்படம் வெளியீட்ட விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஈடாட்டம் குறும்படத்தின் பார்வைகள் தொடர்பில் சஞ்சீவி சிவகுமார், சிவ வரதராஜன், டாக்டர் திருமதி லோ.புஸ்பலதா அகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இந் நிகழ்விற்கு தலைமை தாங்கிய பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் அங்கு மேலும் பேசுகையில்..
இன்று சமூகத்தில் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு சமூகவிரோத செயற்பாட்டிற்கு துணைக்கு அழைக்கும் செயற்பாடுகளை சமூகவிரோதிகள் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக இளைஞர்களை போதைவஸ்துக்கு அடிமையாக்குதல் மூலம் சமூகத்தில் ஒற்றுமையின்மையையும், கலாசார சீரழிவுகளையும் ஏற்படுத்துவதே போதைவஸ்து வியாபாரிகளின் நோக்கமாகும். இதற்கு எந்த இளைஞர்களும் பழியாகிவிடக்கூடாது. இளைஞர்கள் பயனுள்ள சமூக செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
இன்றைய உலகம் சுருங்கிவிட்டது. எமது உள்ளங் கைகளுக்குள்ளே உலக நடப்புக்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. முன்னர் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்த்தார்கள். இன்று தியேட்;டர்களுக்குச் சென்று படம் பார்ப்பவர்களின் விகிதம் குறைவடைந்து விட்டது. இதனை போக்கவே குறும்படங்களின் வரவுகள் வந்துள்ளது.
குறும்படங்கள் ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லிச் செல்கின்றது. இவ்வாறான படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கின்றன. இப் பிரதேசத்தில் இருந்து முதன் முதலில் ஒரு பெண் குறும்பட இயக்குநராக செல்வி கஜானா பரிணாமித்துள்ளார். இவரது ஈடாட்டம் குறும்படமும் எமது சமூகத்தில் இடம் பெறும் கடன் தொல்லையை அழகாக சொல்கின்றது. இவரது முயற்சிக்கு அனைத்தக் கலைஞர்களும் உதவ வேண்டும் என்றார்.
செ.துஜியந்தன்
