பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு தமிழகத்தில் சுதந்திரப்போராட்டத்தில் இறங்கியவர் வ.உ.சி. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக அவருக்கு இரண்டு தீவாந்திரத் தண்டனைகளை ஒரே சமயத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் அளிக்கப்பட்டது. இதுபோல் ஒரு ஆயுள் தண்டனையை 40 என வருடங்களுடன் குறிப்பிட்டு இந்தியாவின் சுதந்திரப்போராட்ட வீர்களில் முதல் நபராக வ.உ.சிக்கு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இரு மேல்முறையீடுகள் செய்த பின் ஆறு வருடங்களாகக் குறைக்கப்பட்டது.
அதன் பிறகு, கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்காடி வந்தவர் தன் இறுதிக்காலத்தில் பல தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டு வந்தார். இதில், வறுமையில் வாடிய வ.உ.சி, நவம்பர் 18, 1936-ல் காலமானார். இவரது உருவப்படத்தை நாடாளுமன்றத்தில் திறக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோருக்கு பாஜகவின் தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவரான எஸ்.கே.கார்வேந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து இருமுறை மக்களவையின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த கார்வேந்தன், ‘இந்து தமிழ்’இணையதளத்திடம் கூறும்போது, ''இந்தக் கோரிக்கையை 2008-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் பலமுறை வைத்திருந்தேன். இது ஏற்கப்படும் நிலையில் வ.உ.சி.யின் உருவப்படமும் நான் தருவதாக உறுதிக் கடிதம் அளித்திருந்தேன். அந்த பரிசீலனை கோப்பு மூடப்பட்டு விட்டதால் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளேன்'' எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சிலை, படங்கள் பின்னணி
நாடாளுமன்றத்தில் 1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 104 உருவப்படங்களும் 49 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழர்களின் உருவப்படங்களாக சுப்பிரமணிய பாரதியார், ராஜாஜி, டாக்டர்.பி.சுப்பராயன், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சேலம் விஜயராகவாச்சாரியார், அனந்தசயனம் ஐயங்கார், மற்றும் எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோருக்கு உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சிலைகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் முரசொலி மாறன் ஆகியோரின் உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மே, 2014-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின் இதுவரை ஒருவருக்கும் சிலை, உருவப்படம் வைக்கப்படவில்லை.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைக்க பிரதமர் மோடியிடம் டிசம்பர் 2016-ல் அப்போது முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் மனு அளித்திருந்தார். சிலை மற்றும் உருவப்படங்களுக்கான நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவில் மக்களவையின் துணை சபாநாயகரான எம்.தம்பிதுரையும் இடம் பெற்றுள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் கதை சுருக்கம்
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
