தெரு நாய்
தூரிகையின் ரகசியங்களுக்குள்
எவருக்கும் புரியாத ஒவியம்
சிறகுகளற்ற வாழ்வின் சுகங்களை
எப்படி விரித்து பறப்பது
ஓவியனின் வாசிப்பில்
சிறகுகளும் கைகளும் கால்களும்
சாதகமாய்கிடக்கின்ற போது
தலை உயர்த்தி பறக்கிறது ஓவியம்
வழக்கமான நம்பிகக்கையுடன்
தூரிகையின் உள்மனசோடு
ஓவியனும் அர்த்தங்கனை பருகிக்கொண்டு
அறையிலிருந்து முன் வாசலுக்கு வருகிறான்
பின்னாங்கால் உயர்த்தி
காட்சிக்கு வைத்திருந்த ஓவியமொன்றில்
தன் வேலையைக் காட்டிச்செல்கிறது ஓரு தெரு நாய்
முன்னே நின்று பார்த்து
இன்னொரு ஓவியத்துக்கான புள்ளி வைத்தான் முன் வீட்டு ஓவியன்.
இரவின் வெளி நிறைய இசை
♪
இரவும் இசையும்
தூங்கப் போதுமானதாக இருக்கின்றன
போதியளவு தூங்காத
இரவும் இசையும் இருக்கின்றன
இரவின் பேரலையைப் போல
இசையின் பேரலைகளும்
துயர் கணங்களை நிசப்தப்படுத்துகின்றன
இந்த உலகம்
இசையின் பிரதி
இந்த இரவின் வெளி நிறைய இசை இருக்கின்றது
இசை ஆன்மாவில் பயணித்து
என்னை ஆசீர்வதிக்கிறது
நட்சத்திரங்களை ஒரு சிறுமி பொறுக்குவதைப் போல
இசையை இரவு முழுவதுமாய் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்

