(தர்சன்)
நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர்விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தின் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்.
இது குறித்து வியாழக்கிழமை 15.11.2018 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஜனநாயக விழுமியங்களை மீறிய இலங்கை அரசியலின் நிலைமைகள் அடிமட்ட பாமர மக்களால் பேசப்படும் அளவுக்கு தரந்தாழ்ந்து போய்க்கொண்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு ஒரு உயிர்ப்பைக் கொடுத்துள்ளது.
ஐனாதிபதி மேற்கொண்ட தவறான நகர்வை மூடிமறைப்பதற்காக தொடர்ந்தும் தவறான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அருவருப்போடுதான் அவதானிக்க நேர்ந்தது.
இலங்கையின் விலைபேசும் நாகரீகமற்ற அரசியல் கலாசாரங்களை நாம் வெறுத்தொதுக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளைப் பணம் கொடுத்து - பதவி கொடுத்து வாங்கி தத்தமது பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்ற முனைப்புகளும் தொடர வழிபிறந்துள்ளன.
இத்தகைய நிலைமைகள் தொடர்ந்தால் அவை எதிர்கால ஜனநாயக அரசியலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, தற்போதைய அரசியல் சதிராட்ட நிலைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
இலங்கையின் இழிவான அரசியல் போக்குகளால் சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட உயர் நீதிமன்றமும் கூட பெரும் சவால்களைச் சந்தித்துள்ள தருணம் இது. அதுமட்டுமின்றி சர்வதேச நாடுகள் கூட இலங்கை அரசியலில் நேரடியாக தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளன.
எனவே, இத்தருணத்தில் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து இலங்கையில் இனப்பாகுபாடற்ற சட்டவாட்சியைக் கொண்டு வருவதற்கு ஜனநாயகவாதிகளும் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்களும் ஒருமித்துப்பாடுபட வேண்டும்.
இனவாதமற்ற அரசியல் நோக்கும் இனவாத அரசியல் வழிபாடும் களைந்தெறியப்பட வேண்டும்.
இந்த மகோன்னத பணியில் இலங்கையில் சிங்கள தமிழ்- முஸ்லிம் முற்போக்குச் சிந்தனையுள்ள இளைஞர் சமுதாயம் இணைந்து கொள்ள நான் அறைகூவல் விடுக்கின்றேன்” என்றார்.






