
இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காவிரியின் குறுக்கே மேகதாது ராசி மணலில் தடுப்பு அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ந்து திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முனைந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கர்நாடக அரசுக்கு மறைமுகமான ஆதரவு வழங்கி அணை கட்டுவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்து வருகிறது.
வெளிப்படையாக அனுமதி கொடுப்பது இல்லை என்றும், அதே நேரத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பது இல்லை என்றும்அதே நேரத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகத்தான் கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசி மணலில் தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்திற்கு 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணியைத் தொடங்குவோம் என்று அறிவித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு செயல்திட்டத்தை உருவாக்கி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரி அனுப்பி வைத்தது. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் மிகத் தெளிவான உத்தரவை வழங்கி இருக்கிறது. அதன்படி, கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்குத் தமிழகத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
ஆனால், கர்நாடக மாநிலம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மதிக்காமலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தாமலும் அடாவடித்தனமாக நடந்து வருகின்றது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை மீறி, 1965 ஆம் ஆண்டில் இருந்து அணைகளைக் கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரைத் தடுத்து விட்டது.
சுவர்ணவதி, ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர், வருணா கால்வாய், யாகச்சி போன்ற அணைகள் கட்டியும், நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்த கர்நாடக மாநிலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் புதிதாக 3 ஆயிரம் ஏரிகளை உருவாக்கி பாசனப் பரப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
1974 இல், கர்நாடகத்தின் பாசனப்பரப்பு வெறும் 6.8 லட்சம் ஏக்கர்தான் இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991 இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்தது.
ஆனால் அதன் பின்னரும் கர்நாடகம் காவிரி பாசனப் பரப்பை அதிகரித்து வந்தது. 2007 இல் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கர்நாடக அரசு விரிவுபடுத்திய பாசன பரப்பையும் உள்ளடக்கி மொத்தம்18.85 லட்சம் ஏக்கர் நிலத்தை பாசன பரப்பாக தீர்மானித்து உத்தரவிட்டது.
ஆனால் அதன் பின்னரும் கர்நாடகம் பாசனப் பரப்பை 21 லட்சம் ஏக்கராக அதிகரித்தது மட்டுமின்றி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 லட்சம் ஏக்கராக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்து இருக்கின்றது.
ஆனால் தமிழகத்தில் 1971 இல் காவிரி பாசனப் பரப்பு, 25.03 ஏக்கராக இருந்ததை நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் 24.71 லட்சம் ஏக்கர் என்று குறைத்தது. இதனால் முப்போகம் சாகுபடி நடந்த காவிரிப் படுகையில் தற்போது ஒருபோக சாகுபடி செய்வதற்குக்கூட நீர் இன்றி வேளாண்மைத் தொழில் கேள்விக்குறியாகி விட்டது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக மாநிலம் அளித்த செயல்திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்து இருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நடவடிக்கை ஆகும். கர்நாடகம் தடுப்பு அணை கட்டினால், இனி ஒரு சொட்டு நீர் கூடத் தமிழகத்திற்குக் கிடைக்காது.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறைப் படிம எரிவாயு உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்தி, காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் மத்திய பாஜக அரசின் சதித்திட்டத்திற்கு ஏதுவாக, தற்போது மத்திய நீர்வளத்துறை மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளித்து இருக்கின்றது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.
கஜா புயலின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகி காவிரி டெல்டா மாவட்ட மக்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி தெருவில் நிற்கும் சூழலில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மோடி அரசு கர்நாடகத்திற்கு காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
பாஜக அரசு தமிழக மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு கர்நாடகம் அணை கட்டத் துணைபோனால், வரலாறு காணாத போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறேன். மத்திய நீர்வளத்துறை கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் தடுப்பு அணை கட்ட வழங்கியுள்ள அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது பகுதியில் குடிநீர் பயன்பாட்டுக்கு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடகாவின் காவிரி நீராவரி நிகாம் அமைப்புக்கு கடந்த நவம்பர் மாதம், மத்திய நீர் வள ஆணையம் அனுமதி அளித்தது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தயாரித்திருக்கும் செயலாக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஏற்கெனவே கூறியிருந்தேன். செயலாக்க அறிக்கையில் உள்ளதுபடி அந்த அணையானது குடிநீர் திட்டத்திற்கானது மட்டுமல்ல. கர்நாடகாவில் காவிரி பாசன பரப்பை அதிகரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
தமிழக அரசின் நேர்மையான, நியாயமான இந்தக் கருத்துகளை ஆலோசிக்காமல், மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவுத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது.
மத்திய நீர் வள ஆணையத்தின் நடவடிக்கை, காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வள ஆனையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்" என முதல்வர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
