தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக சுகாதாரத் துறையின் சுகாதாரத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை தனது பணியை ஆற்றி வருகிறது.
புயல் பற்றிய எச்சரிக்கை வந்த நாள் முதலே 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மற்ற போக்குவரத்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட போதும் 108 ஆம்புலன்ஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன.
புயல் கரையைக் கடந்த பின்னர் மீட்புப் பணியில் 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 33 ஆம்புலன்ஸ்களுடன் 132 பணியாளர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 18 ஆம்புலன்ஸ்களுடன் 72 பணியாளர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 ஆம்புலன்ஸ்களுடன் 90 பணியாளர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 ஆம்புலன்ஸ்களுடன் 92 பணியாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை 108 சேவையின் பணிகள் தொடரும் என்று 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும் ஜிவிகே - இஎம்ஆர்ஐ நிறுவன நிர்வாகி பிரபுதாஸ் கூறினார்.
அன்மையில் பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது யார்? என்பது குறித்து அ.தி.மு.க. அமைச்சருக்கும், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 108 ஆம்புலன்ஸ் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மத்திய சுகாதார மந்திரியாக 2004-ம் ஆண்டு பொறுப்பேற்ற நான் 2005-ம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் தொடங்கினேன்.
உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கம் என்று போற்றப்பட்ட இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருமுறை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு அனைத்து வகையான அவசர சேவைகளும் 911 என்ற எண்கொண்ட இலவச தொலைபேசி அழைப்பின் மூலம் வழங்கப்படுவதை அறிந்த நான், அதுபோன்ற சேவையை இந்தியாவிலும் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த சிந்தனையில் உதித்தது தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
108 என்ற எண் ராணுவத்தின் பயன்பாட்டில் இருந்ததால் நாடு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி, தொலைதொடர்பு மந்திரி ஆ.ராசா ஆகியோருடன் பேச்சு நடத்தி 108 என்ற எண்ணை வாங்கி நாடு முழுவதும் இத்திட்டத்தைத் தொடங்கினேன்.
இதற்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒருமுறை 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் தமது திட்டம் என்றார். அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டபோது பதில் கூறமுடியாமல் பின்வாங்கிவிட்டார்.
இன்றைய நிலையில் 22 மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல மாநிலங்களுக்கு நானே நேரில் சென்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். அந்த மாநிலங்களில் எல்லாம் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான் ஆட்சி செய்தனவா? என்பதை அக்கட்சிகள் விளக்க வேண்டும்.
108 ஆம்புலன்ஸ் சேவை ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது என கூசாமல் பொய் கூறும் குட்கா ஊழல் புகழ் விஜயபாஸ்கரால் இதை ஆதாரத்துடன் மறுக்க முடியுமா? இதற்குப் பிறகும் தி.மு.க.வினருக்கு தெளிவு பிறக்கவில்லை என்றால், 108 என்ற எண்ணை இதற்கான தனிப்பயன்பாட்டுக்காக வாங்கியது டாக்டர் அன்புமணி ராமதாசா, கருணாநிதியா, ஜெயலலிதாவா? என்பதை தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் லாபத்திற்காக பொய் கூறுவது திராவிடக் கட்சிகளின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு. அடுத்தவர் பெருமையை கொள்ளையடிக்கும் அரசியலை இனியாவது கைவிட்டு, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தும் நாகரிக அரசியலுக்கு இரு திராவிடக் கட்சிகளும் மாற வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது கவனத்துகுரியது.
