மரியன்னை முற்றிலும் தன் வாழ்வை மற்றவர்க்காக ஒப்படைத்துக் கொண்டவள். கடவுளின் சித்தமே தன் சித்தமாக ஏற்றுக் கொண்டவள் அவள். மனுக்குல மீட்பில் தன்னை முழுமையாக விடடுக் கொடுத்து, கடைசி வரை சோகங்களைத் தனதாக்கிக் கொண்டு இலாபங்களை மனுக்குலத்திற்கு வழங்கியவளல்லவா அவள்? தானே ஒரு கருவைச் சுமந்த நிலையில் கூட, தன் கருவையோ, தன் உடல் பாதிப்பையோ கொஞ்சமும் மனதிற் கொள்ளாதவளாக, சீமாட்டி எலிசபெத்துக்கு ஆறுதலாக இருக்கவும், பணிவிடைகள் புரியவும் காடு மேடேறி விரைந்தவளல்லவா அவள்? அவளது பிறருக்காக வாழும் பண்பு அவளை மானிடத்தின் அன்னையாகவல்லவா உயர்த்தியிருக்கிறது?
தூய வின்சன்ட் டி போல் தன்னோடு சிறைப்பட்டிருந்தவனுக்காகத் தண்டு வலித்து, இறக்கும் வரையில் கூட மாறாத புண்ணை காலில் கொண்டிருந்தவர். வறுமையின் நிறத்தைத் தெரிந்திருந்திருந்த அவர் அதன் சாயம் மற்றவர்களையும் தொட்டுவிடக் கூடாதென்பதில் ஆர்வத்தோடு தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். துன்புறும் மக்களில் இறைவனின் சாயலைக் கண்டு அவர்களுக்காகத் தம் வாழ்வை சமர்ப்பணம் செய்தவர். கடவுளின் இராச்சியத்துக்கு உரித்தானவர்களான குழந்தைகளை கொடியவர் கரங்களின்றும், வறுமையின் பிடியினின்றும் மீட்டுக் காப்பதில் கொடிய மிருகங்களுடன் கூட போட்டி போடத் தயங்காத பெரு மனிதராக இவர் வாழ்ந்திருந்தார்.
ஒரு காலத்தில் தனக்காக - தன் வாழ்வுக்காக ஒரு பெண் உயிலாக விட்டுச் சென்ற செல்வத்தை அது சிறிதாக இருந்தாலும் கூட, தேவை என்று தேடிச் சென்ற மனிதர், ஒரு நிலையில் மற்றவர்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து புனிதராக மாறிய வரலாற்றைக் காண்கிறோம். ஆவர் வாழும்போது நாட்டின் அரசியாரே அவரைக் கேட்டு ஆலோசித்து கருமங்களை முன்னெடுக்கும் உயர்வான ஒரு நிலையைக் கூட அவருக்கு இறைவன் வழங்கியிருந்ததை அவரது வாழ்வின் வரலாற்றிலே நாம் காண்கிறோம்.
வாழும்போதே தூயவளாகப் போற்றப்பட்ட அன்னை தெரேசா கூட தனக்காக வாழ்வதை விடவும் மற்றவர்களுக்காக வாழ்வதில்தான் மனிதத்தின் - மனித நேயத்தின் - தொடர்ச்சியான இருப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதை உணர்ந்தவளாக இறைவனின் அழைப்பிற்குச் செவி சாய்த்து பிறருக்காகத் தான் வாழ, தன்னை முழுமையாக விட்டுக் கொடுத்ததை உலகறியும். தன்னை மட்டும் நேசித்து அவள் வாழ்ந்தபோது அவளைத் தெரிந்திருந்தவர்களின் தொகை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்திருக்கும். மாறாக, பிறருக்காக வாழ அவள் முற்பட்ட பிறகு முழு உலகமுமே அவளைத் தெரிந்து வைத்திருந்தது.
நம் வாழ்;வு நம்மோடு இருக்கின்றவரை நம் விலாசம் நமது வீட்டின் விலாசம் என்ற மட்டில்தான் அமைந்து விடுகிறது. மற்றவர்களுக்காக நம் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளும்போது முழு உலகமே நமக்கான விலாசமாக, இருப்பாக மாறி விடுகின்றது.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
