Thursday, July 14, 2022
மட்டக்களப்பு விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக கரம்கொடுத்துவரும் தேசபந்து செல்வராஜா - மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மூன்றாவது தடவையாக இன்றைய தினமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு 4000 லிட்டர் டீசலினை வழங்கியுள்ளனர்.
முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளின் பெயர்களையும் உரிய கண்டங்களையும் அறுவடைத் திகதியின் அடிப்படையில் அதற்குப் பொறுப்பான துறைசார் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டு
முன்னுரிமையடிப்படையில் வாழைச்சேனை கமநல கேந்திர நிலையம், கிரான் கமநல கேந்திர நிலையம், மண்டபத்தடி கமநல கேந்திர நிலையம் அடங்கலான மூன்று ஏபிசிகளில் 4 கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இன்றைய தினம் (12) திகதி செவ்வாய்க்கிழமை எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் விவசாயிகளுக்காக டீசலினை வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாக மட்டக்களப்பு நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கத்தின் தலைவரும், தொழில் அதிபருமாகிய தேசபந்து எம்.செல்வராஜா இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் ஏற்கனவே இரண்டு தடவைகளில் விவசாயிகளுக்கு முன்னுரிமையடிப்படையில் 3500 லீற்றர் டீசலினையும், 50 விவசாயிகளுக்கான பெற்றோலினையும் வழங்கியிருந்ததுடன், மாவட்ட விவசாயிகளிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது மட்டுமல்லாது தொடர்ச்சியாக விவசாயிகள் தமது நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்து வருகின்றனர்.
நாடு பூராகவும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் அனைத்து தரப்பினரும் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையமானது தொடர்ச்சியாக ஒரு வார காலமாக நாளாந்தம் எரிபொருளை வழங்கிவருகின்றமையானது, மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரமாகவே குறித்த எரிபொருள் நிலையத்தையும் அதன் உரிமையாளரையும் பார்ப்பதாக மாவட்ட புத்திஜீவிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.