Monday, April 25, 2022
பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற தொலைக்கல்வி நிலைய திறப்பு விழா!!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்தின் பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் தொலைக்கல்வி நிலைய திறப்பு விழா இன்று (22) திகதி வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றிருந்தது.
பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் வீ.புஸ்பா கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், குறித்த தொலைக்கல்வி நிலையத்தினையும் திறந்துவைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கான நீண்டகால தேவையாக இருந்து வந்த தொலைக்கல்வி நிலையத்தின் தேவையை உணர்ந்து கொண்ட AU Lanka நிறுவனமானது Child fund நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் குறித்த தொலைக்கல்வி நிலையத்தினை ஏற்பாடு செய்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பித்துவைத்துள்ளனர்.
இந் நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன், மண்முனை மேற்கு கல்விப்பணிப்பாளர் செல்வி.அகிலா கணகசூரியம், AU Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளர் ஆர்.தவசீலன், AU Lanka நிறுவனத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான கே.சதீஸ்குமார் கலந்துகொண்ட நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது AU Lanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் "மரம் வளர்ப்போம் உயிர்காப்போம்" எனும் தொனிப்பொருளில் பயன்தரும் 550 இலுப்பை மரக்கன்றுகளை
நடும் நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வானது குறித்த பாடசாலையில் வளாகத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டு குறித்த திட்டம் அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஊடாக குறித்த பாடசாலையில் இருந்து 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், இதன்போது நடப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு மாணவரை பெறுப்பானவராக நியமித்து குறித்த மரத்திற்கு அந்த மாணவரின் பெயரை சூட்டியதுடன், 150 மாணவர்களுக்கும் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு அவர்களுக்கான ஊக்குவிப்பு உதவித்தொகையும் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த Au Lanka நிறுவனமானது கடந்த 12 வருடங்களாக தமது சேவையினை மண்முனை மேற்குப் பிரதேச செயலக பிரிவில் திறப்பட ஆற்றிவருவதுடன், இப்பகுதி மக்களின் கல்வி, கலாசாரம் மற்றும் பொருளாதார போன்ற விடயங்களை மேம்படுத்துவதற்காக திறம்பட செயற்பட்டு வரும் நிலையிலேலே 400 இற்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட குறித்த பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் தேவையினை உணர்ந்ததன் அடிப்படையிலேயே குறித்த தொலைக்கல்வி நிலையத்தினை ஆரம்பித்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.